Skip to main content

மோடி, அமித்ஷாவை எச்சரித்த அத்வானி!!! கடிதம் குறித்து கருத்து தெரிவித்த மோடி... 

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

பாஜக நிறுவப்பட்ட நாளை (ஏப்ரல் 6) முன்னிட்டு, பாஜக நிறுவனர்களில் ஒருவரும், மூத்த தலைவருமான அத்வானி, ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

 

advani


கடந்த தேர்தல்களில் 6 முறை வென்ற மற்றும் அத்வானியின் ஆதர்சன தொகுதியான காந்திநகரை அமித்ஷாவிற்கு ஒதுக்கியுள்ளது தற்போதைய தலைமை. மோடி மற்றும் அமித்ஷாவின் வளர்ச்சிக்கு பிறகு பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிறுவனர்கள் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் நேற்று அத்வானி அவரது பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தற்போது பாஜகவில் நடப்பது குறித்தும், மோடி அமித்ஷா தலைமை குறித்தும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். பின்நோக்கு, எதிர் நோக்கு, உள் நோக்கு என்று பாஜகவிற்கு கூறுவதுடன் தொடங்குகிறது அவரது கட்டுரை,
 

வரும் ஏப்ரல் 6, பாஜக நிறுவப்பட்ட நாள். இது மிகவும் முக்கியமான நாள். பாஜக தான் கடந்து வந்த பாதையை பின்நோக்கி பார்க்க வேண்டும். அதுபோல எதிர்காலத்தை பற்றிய சிந்தனையும், சுயபரிசோதனையும் பாஜக வுக்கு தேவை. பாஜக நிறுவனர்களில் ஒருவரான நான் எனது கருத்தை இந்திய மக்கள் மத்தியில் இந்த தருணத்தில் கூறியாக வேண்டும். குறிப்பாக இலட்சக்கணக்கிலுள்ள பாஜகவின் உறுப்பினர்களுக்கு எனது அன்பையும், மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 

எனது கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு முன்பாக, 1991 முதல் மக்களவை தேர்தலில் என்னை ஆறுமுறை வெற்றிபெர வைத்த காந்திநகர் மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் அன்பும், துணையும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்துள்ளது.
 

எனது தாய் நாட்டிற்கு சேவை செய்வதற்காக, நான் ஆர்.எஸ்.எஸ்.ஸில் எனது 14வது வயதில் சேர்ந்தேன். கிட்டதட்ட 70 ஆண்டுகளாக எனது அரசியல் வாழ்வு, கட்சியுடன்  சேர்ந்தேதான் இருக்கிறது. முதலில் பாரதிய ஜன சங்கமாக இருந்து, பிறகு பாரதிய ஜனதா கட்சியாக மாறிய இதன் நிறுவனர்களில் ஒருவர் நான். பண்டிட் தீனதயாள், அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற தன்னலமற்ற, மதிப்புமிக்க தலைவர்களுடன் பணியாற்றும் அரிய வாய்ப்பும் கிடைத்தது.
 

“முதலில் நாடு, பிறகு கட்சி, கடைசியாகதான் தன்னலம்” என்ற கொள்கையைத்தான் நான் அனைத்து சூழ்நிலைகளிலும் கடைபிடிக்க முயற்சி செய்தேன். இனியும் செய்வேன்.
 

இந்திய ஜனநாயகத்தின் சாராம்சம் என்பது  பன்முகத்தன்மையை மதித்தல், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை ஆகும். தொடக்கத்திலிருந்தே பா.ஜ.க. அரசியல் ரீதியான எதிரிகளை விரோதிகளாக பார்த்ததில்லை. மாற்று கருத்துடையவர்களை தேசவிரோதிகளாக நினைத்ததில்லை. ஒவ்வொரு குடிமகனின்  அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு பாஜக எப்போதும் மதிப்பளித்துள்ளது.
 

advani


கட்சிக்கு எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை வந்தபோதிலும், உண்மை, நாட்டுக்கு அர்ப்பணித்தல், கட்சிக்கு உள்ளும், வெளியிலும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் ஆகிய கொள்கைகளை கட்சி விடவில்லை. இந்த மூன்றும் இணைந்தால்தான் கலாச்சார ஒற்றுமையையும், நல்ல நிர்வாகத்தையும் உருவாக்க முடியும். இந்த இரண்டும் எப்போதும் கட்சியுடன் ஒன்றிணைந்தது. எமர்ஜென்சி காலத்தில் நடந்த போராட்டங்கள் அனைத்தும் இவற்றை காப்பாற்றுவதற்காகத்தான்.
 

இந்தியாவின் ஜனநாயக நிர்மாணத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் கூட்டு முயற்சி செய்ய வேண்டும் என்பது என் உண்மையான விருப்பம். தேர்தல்கள்தான் ஜனநாயகத்தின் பண்டிகை. அதுமட்டுமல்ல தேர்தல்கள்தான் ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக உள்ள, அரசியல் கட்சிகள், வெகுஜன ஊடகங்களும், தேர்தல் அதிகாரிகள், எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள் ஆகியோர் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் தருணமாக உள்ளது.
 

அனைவருக்கும் எனது வாழ்த்துகள்...
 

கிட்டதட்ட 5 வருடங்களாக தனது கருத்துகளை தெரிவிக்காமல் இருந்த அத்வானி தற்போது இப்படியான கடிதத்தை எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்திலும், பாஜகவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களுக்கும்,  வெறுப்புணர்வை பரப்புபவர்களுக்கும், ஹெச்.ராஜா போன்றவர்களுக்கும் இந்த கடிதம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதே உண்மை.
 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இவ்வாறு கூறியுள்ளார், ‘‘பா.ஜவின்  உண்மையான சாரம்சத்தை அத்வானி துல்லியமாக சொல்லியிருக்கிறார். ‘‘முதலில்  நாடு, அடுத்து கட்சி, தனது நலன் கடைசியே’’ என்பதுதான் வழிகாட்டும்  மந்திரம். அத்வானியை போன்ற உயர்ந்தவர்கள் கட்சியை வலுப்படுத்தியது  பெருமையாக உள்ளது’’