Skip to main content

பகத்சிங் இந்துத்துவவாதியா? 

Published on 23/03/2018 | Edited on 23/03/2018

மார்ச் 23 - பகத் சிங் நினைவு நாள் 

தன்னை சந்திக்க வந்த வழக்கறிஞரிடம், "லெனின் புத்தகம் (Reminiscences of Lenin) கொண்டு வரவில்லையா" என்று ஏங்கிய குரலில் கேட்க, வழக்கறிஞர் அந்தப் புத்தகத்தை எடுத்து தருகிறார். புத்தகத்தை வாங்கியவுடன், உடனே விரித்துப் படிக்கத் தொடங்குகிறார். வழக்கறிஞர் அவரிடம், 'நாட்டுக்காக கடைசியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?' என்று கேட்க, புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் "ஏகாதிபத்தியம் ஒழிக, இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)" என்கிறார்  இருபத்திமூன்று வயது புரட்சிகர இளைஞர் பகத்சிங். இந்த நிகழ்வு அவர் தூக்கில் ஏற்றப்படுவதற்கு இரண்டு மணிநேரமுன் நடந்தது. ஆனால், முதலில் அடுத்த நாள் ஆறு மணிக்குத்தான் தூக்கில் இடப் போவதாக அறிவித்திருந்தார்கள். திடீரென பன்னிரெண்டுமணி நேரங்களுக்கு முன்னமே தூக்கிலிட்டு விட்டார்கள். 
 

bagat sukhdev raj



பகத்சிங், இந்திய இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். விடுதலைக்கான இவரது பாதை மாறுபட்டிருந்தது. தேச தந்தை என அழைக்கப்படும் காந்தி, இந்தியாவில் அஹிம்சையை பரப்பிக்கொண்டிருந்த போது, அதிலிருந்து வேறுபட்டு வன்முறையை கையில் எடுத்துவிட்டார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்ற ஏசுவின் கொள்கையை பின்பற்றிய பெரும்பாலான விடுதலை போராளிகளில், சிலர் மட்டும் கன்னத்தில் அறைந்தவர்களை  பதிலுக்கு  அறைந்தார்கள். விடுதலையை நோக்கிய பயணத்தில் பலரும் பல்வேறு விதமான கொள்கைகள், பாதைகளில் பயணித்தார்கள். அக்காலகட்டத்தில் ஒவ்வொன்றும் இந்தியாவின் விடுதலைக்குத்  தேவையாகவே இருந்தது. அனைத்தையும் தாண்டி விடுதலை போராட்ட வீரர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் மனதில் இருந்தது, "என் நாட்டிலிருந்து வெள்ளையர்கள் வெளியேற வேண்டும், விடுதலை கிடைக்க வேண்டும்" என்பது.   

 

bagat



இப்படி ஒரு தேசப்பற்றுதான் பகத்சிங்குக்கும். தனது விடுதலை போராட்டத்தின்  தொடக்கமாக, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, ஆங்கிலேய புத்தகங்களையும் உடைகளையும் எரித்து அவரது எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்தார். இந்த ஒத்துழையாமை இயக்கம் காந்தி நினைத்தது போல முழுமையாக அமைதியாக செயல்படவில்லை, ஆங்காங்கே வன்முறைகளை கையில் எடுக்க நேர்ந்தது. சவுரி சவ்ரா நிகழ்வுக்கு பிறகு காந்தியும் அதை கைவிட்டுவிட்டார். இதன் மூலம் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று நினைத்திருந்த பகத்துக்கு அது ஏமாற்றம் அளித்தது. காந்தி நமக்கு ஒத்துவர மாட்டார் என்று எண்ணி வேறு பாதையை தேர்வு செய்தார். லாலா லஜ்பத் ராயின் இயக்கத்தில் சேர்ந்தார். ஒரு போராட்டத்தின் போது ராயை ஆங்கிலேய காவலாளிகள் லத்தியால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். ராயின் உயிரும் இந்த சம்பவத்துக்கு பின்னர் சில நாட்களில் பறிபோனது. இதற்கு பழி வாங்கும் வகையில், ஜேம்ஸ் ஸ்காட் என்ற காவல்துறை கண்காணிப்பாளரை துப்பாக்கியால் சுட திட்டம் தீட்டினார். ஆனால், அந்தத் திட்டம் குளறுபடியாகி பகத் சுட்ட குண்டு துணை கண்காணிப்பாளர் மீது பாய்ந்தது. பகத்தை ஊரெங்கும் தேடினர். காவலர்களிடம் மாட்டி  பின்னர் தப்பித்துவிட்டார். அதற்காகப் போட்ட மாறுவேடம் தான் முறுக்கிய மீசையுடன், தலையில் ஒரு தொப்பியுடன் அவர் இருக்கும் புகழ் பெற்ற படம். 
 

bagath singh hat



அடுத்த சம்பவமாக சென்ட்ரல் அசம்பிளியில் வெடிகுண்டு வீசி தாக்கி, 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டார். இதற்கு அடுத்துதான் அவரை தூக்கில் இட கட்டளை இட்டனர். இவருடன் இருந்த ராஜ்குரு மற்றும் சுக்தேவுக்கும் தண்டனை வழங்கினர். சிறையிலும் 'கைதிகள் ஒழுங்காக நடத்தப்படவில்லை' என்று அகிம்சை வழியில் போராடினார். நூறு நாட்களுக்கும் மேல் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் இருந்த இயக்கத்தில் எல்லோரும் இந்துத்துவ கொள்கை கொண்டவர்களாக இருந்ததால், பகத்சிங்கும் அப்படியே என்று பேசப்பட்டு வந்தார், வருகிறார். இன்று ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல இயக்கங்களும் இவரை சொந்தம் கொண்டாடுகின்றன. இன்னொரு பக்கம், முதன் முதலில் சோஷலிச கொள்கைகளை, இந்தியாவில் இயக்கத்தின் மூலம் கொண்டுவந்தவர் இவர்தான் என்றும் சொல்கின்றனர். பகத்சிங், தன்னுடைய பயணத்தில் ரஷ்ய புரட்சியை பாடமாக படித்து பின்பற்றியிருக்கிறார். இது சிறையில் அவர் படித்த புத்தகங்கள், பேசியது என பல வழிகளில் வெளிப்பட்டிருக்கிறது. இவர் சுக்தேவ், சந்திரசேகர் ஆசாத் ஆகியோரோடு இணைந்து தொடங்கிய இயக்கம் 'இந்துஸ்தான் சோசியலிச குடியரசு' இயக்கம் ஆகும். அவரது குடும்பமே இந்து இயக்கமான 'ஆரிய சமாஜ'த்தில் தீவிரமாக இயங்கிய போதும் அவர் அதில் தீவிரம் காட்டவில்லை. உண்மையில் 23 வயதிலேயே தூக்கிலடப்பட்ட பகத் சிங்கின் வாழ்க்கை பல கேள்விகளை விட்டுச் சென்றுள்ளது. 

பாகிஸ்தானிலும் பகத் சிங்கின் நினைவு அனுசரிக்கப்படுகிறது, பாகிஸ்தானிய கவிஞர் மௌலானா ஜாபர் அலிகான் தான் முதலில் பகத் சிங்கை 'மாவீரர்' என்று விளித்ததாகக் கூறுகிறார்கள். லாகூரில் பகத் சிங் அறக்கட்டளை இருக்கிறது. பகத் சிங் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி பலரும் பல விதமாக இப்பொழுது கூறலாம். ஆனால், நாட்டு மக்களின் விடுதலைக்கு அவர் கொடுத்த உயிர் தியாகம்தான் அவரை இன்றும் பேசவைக்கிறது.                                       

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.