2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு உள்ளிட்டவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் திமுகவுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் நாஞ்சில் சம்பத். "திமுக ஏன் ஆட்சிக்கு வரவேண்டும்?" என்ற கேள்வியை எழுப்பினோம்.
அதற்கு அவர், தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்திருக்கிற அதிமுக ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருப்பதற்குத் தகுதியற்றது. எல்லாத் துறைகளிலும் கோடிக் கணக்கில் முறைகேடுகள் செய்து, இந்தியாவில் ஊழல் ஆட்சி நடைபெறுகிற ஒரே மாநிலம் என்று பெயர் பெற்றிருக்கிற இவர்கள், பதவியில் இருந்து இறக்கப்பட வேண்டும்.
தூத்துக்குடியில் அறம் சார்ந்த போராட்டத்தை நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரை கொலைசெய்த இந்த கும்பல், கோட்டையில் இனி குடியேறக்கூடாது. சாத்தான் குளத்தில் கரோனா காலத்தில் கடை திறந்து வைத்திருக்கிறார் என்ற காரணத்திற்காக தகப்பனையும் மகனையும் கொன்று முடித்த இந்த கொலைகார ஆட்சி, நீடிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
யாரும் தொடமுடியாத அளவிற்குத் தமிழகத்தில் விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு துரும்பைக் கூட தூக்கிப்போடாத இவர்கள் ஆட்சிக்கு நிச்சயமாக வரக்கூடாது. அதையும் தாண்டி, தமிழ்நாட்டில் பெண்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் இன்று பாதுகாப்பு இல்லை. ஆணவக் கொலைகள் நாளும் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி வரவேண்டும். வேலையில்லாத இளைஞர்களுக்காக வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தருகிற ஆட்சியாக அவர்களுடைய ஆட்சிதான் இருக்க முடியும். உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் ஒரு தலைசிறந்த நிர்வாகி என்று பாராட்டப்பெற்ற ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும்.