Skip to main content

"2024ம் ஆண்டு தேர்தல் பரம்பரை யுத்தம்; இன்று கழுத்தை நீட்டியுள்ளார்கள் நாளை நம்மையே வெளியேற்றுவார்கள்..." - திருமா பேச்சு

Published on 03/12/2022 | Edited on 05/12/2022

 

சத

 

சென்னையில் நடைபெற்ற தி.க தலைவர் வீரமணி அவர்களுடைய பிறந்தநாள் விழாவில் திருமா பேசியதாவது, "இன்றைக்கு ஆசிரியர்கள் அவர்களின் பிறந்தாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஓய்வுக்கே ஓய்வு கொடுத்துக்கொண்டு இந்த தொண்ணூறு வயதில் தமிழ் இனத்துக்கும் தமிழக மக்களுக்கும் தனது எழுத்துகளாலும், கருத்துக்களாலும் தொடர்ந்து பணி செய்து வரும் அவர் இந்த வயதிலும் ஒருநாளும் சோர்ந்து போகவில்லை. இந்த ஓய்வறியா உழைப்பு எப்படி வந்தது என்பதற்கு அவர் பெரியாரை உதாரணமாகக் காட்டுகிறார்.முதுமை காலத்தில் பெரியார் பங்கெடுக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டால் சிரமமாக இருக்கே என்ற காரணத்திற்காக அவரிடம் நிகழ்ச்சியைத் தள்ளிவைத்துக் கொள்ளலாமா என்று தான் கேட்டு அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததை அருகிலிருந்து பார்த்த எனக்கு எப்படி ஓய்வெடுக்கத் தோன்றும் என்று தனது பிறந்தநாள் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

 

பெரியாரை அருகிலிருந்து பார்த்த காரணத்தாலோ என்னவோ அவரைப்போல் தமிழர்களுக்காக ஓய்வறியாது இந்த வயதிலும் தொடர்ந்து உழைத்து வருகிறார். தனது பிறந்தநாள் செய்தியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் என்பது மிக முக்கியமானது. வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது பரம்பரை யுத்தத்திற்கான தேர்தல் என்று ஒற்றை வரியில் தெரிவித்துள்ளார். எவ்வளவு தீவிரமாக யோசித்திருந்தால் இதை அவர் கூறியிருப்பார், அவர்கள் ஒன்றும் தேர்தல் அரசியலில் நாட்டம் கொண்டவர்கள் இல்லை; வேட்பாளர்களைத் தேர்தலிலே நிறுத்தப்போவதுமில்லை. ஆனால் இந்த நாடு சனாதன சாக்கடையில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் மிக உறுதியாக தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

 

இன்றைக்கு அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது ஆனால் தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அது தற்போது பலருக்கு வயிற்றெரிச்சலைக் கொடுத்துள்ளது. அதனால் எவ்வாறு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்று அனுதினமும் யோசிக்கிறார்கள். இன்றைக்குப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு என்று இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளார்கள். அதைக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும் இதனால் பயனடையட்டும் என்ற அடிப்படையில் அதனை ஆதரிக்கிறார்கள். ஆனால் பாஜகவின் பார்வை என்பது இந்த விஷயத்தில் முற்றிலும் வேறானது. 

 

முற்பட்ட வகுப்பினர் படிக்க நிதி வேண்டும் என்றால் கொடுங்கள்; நிலம் வேண்டுமென்றால் கொடுங்கள்; நாங்களும் அதை ஆதரிக்கிறோம். இத்தனை ஆண்டுகள் நாங்கள்தானே மாடு மேய்த்தோம், களை எடுத்தோம், சாணி வாரினோம், தற்போது அதை அவர்களும் செய்யட்டும். இது எதுவுமே அவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாகத் தெரியாதே.  ஆனால் தற்போது இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை வைத்து அளவீடு செய்ய வேண்டிய ஒன்றல்ல, அது முற்றிலும் தவறு என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இன்றைக்குப் பொருளாதார இட ஒதுக்கீட்டை நாம் எதிர்க்காமல் அனுமதித்தால் நாளை இதைச் சாக்காக வைத்துக்கொண்டு நம்முடைய இதர உரிமைகள் அனைத்தையும் நம்மிடமிருந்து பறித்து விடுவார்கள். 

 

ஆகையால் நாம் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்துகொண்டு இருக்க முடியாது. இதற்கு நாம் அமைதியாக இருந்தோம் என்றால் நாளை சமூகநீதியை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதற்கு நாம் அமைதியாக இருந்துவிட்டோம் என்றால் நாமும் அதில் குற்றவாளிகளாக ஆகிவிடுவோம். அந்த தவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது. இந்த உயர்சாதி இட ஒதுக்கீடு என்ற ஒட்டகம் சமூக நீதி என்ற கூடாரத்தில் தற்போது தலையை நீட்டுகிறது. நாளை அது நம்மை வெளியேற்றி விடும் என்பது மட்டும் நிச்சயம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்