Skip to main content

அதிமுக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக முழு ஆதரவு: மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

‘காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 
 

அப்போது பேசிய அவர், 
 

காவிரி நம் அனைவரின் உணர்வுடனும் ஐக்கியமாகியிருக்கும் உயிராதாரப் பிரச்சினையாக இருக்கிறது. அரசியல் வேறுபாடுகளை எல்லாம் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இன்றைக்கு நாம் அனைவரும் தமிழகத்தின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் வாழ்வு உரிமைகளுக்காக ஒரேநோக்குடன் ஒன்று கூடியிருக்கிறோம் என்பது உள்ளபடியே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தின் பொது நலன்களைக் காப்பதில் இந்த ஒற்றுமை உணர்வு தளராமல் தொடர வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 
 

1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக முதலில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். அமைச்சர்கள் மட்டத்திலும், முதலமைச்சர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஆனாலும் தீர்வுக்கான அறிகுறிகள் எதுவும் காணக் கிடைக்காத காரணத்தால், வேறு வழியின்றி, நடுவர் மன்றத்தை நாடினோம். 205 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு அளித்து இடைக்கால உத்தரவை நடுவர் மன்றம் பிறப்பித்தது. ஆனால் அந்த இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ள மாதாந்திரத் தண்ணீர் அளவினை மழை வந்த காலம் தவிர, ஒரு வருடம் கூட, கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு திறந்து விட்டது இல்லை. 

 

mkstalin eps ops


 

பிறகு நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பையும் அளித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலும் எந்த மாதத்திலும் தண்ணீரைத் திறந்து விட கர்நாடக அரசு முன்வந்ததில்லை. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் நாம் உச்சநீதிமன்றத்தை அணுகி தண்ணீரை திறந்து விடுவதற்கு உத்தரவு பெற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றாலும், அந்த உத்தரவையும் கர்நாடக மாநில அரசு நிறைவேற்ற நினைத்ததில்லை. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தான், 16.02.2018 அன்று, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் நமக்கு 192 டி.எம்.சி. காவிரி நீர் கிடைக்கும் என்ற நிலைமாறி, இப்போது அது 177.25டி.எம்.சி.யாகக் குறைந்து விட்டது. இதுதான் இன்றைக்கு தமிழக மக்கள் மத்தியில் - விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த திட்டம் (Scheme) ஆறு வாரத்திற்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது; இந்தக்  கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அறுதியிட்டுக் கூறியிருப்பது நமக்கெல்லாம் ஆறுதலாக உள்ளது. 
 

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்புக்கு இப்போது உச்சநீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்துள்ளது; அதாவது, உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ள நீர்ப்பங்கீடு முறை 15 வருடத்திற்கு அமலில் இருக்கும் என்று கூறியிருப்பதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு முறை நியாயம் கேட்டுச் செல்லும் போதும் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரின் அளவு குறைக்கப்படுவதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நாம் இடம் கொடுத்து விடவும் கூடாது. அதில் தமிழக அரசு கவனமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். 
 

காவிரி இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு இரண்டும் பக்ரா நங்கல் நதிநீர் பங்கீட்டின் அடிப்படையில் தான் என்று நடுவர் மன்றம் தெளிவாக கூறியிருக்கிறது. அதேபோல் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக் கொள்வது என்ற வாதத்தில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நடுவர் மன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டித்தான் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கர்நாடகாவிற்கு அதிக நீர்ப்பங்கீடு அளித்துள்ளதையும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள் என்று நேரடியாக மத்திய அரசுக்குச் சுட்டிக்காட்டாமல் இருப்பதையும் நாம் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். 
 

தீர்ப்பின் 452 முதல் 457 வரையிலான பக்கங்களில், 1956-ஆம் வருடத்திய நதிநீர் தாவா சட்டத்தில் உள்ள "Scheme" என்பதை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், 30.9.2017 அன்று மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, இந்த ""ஸ்கீம்"" என்பதை  உருவாக்குவதற்கு, மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் வாதிட்டார். ""ஸ்கீம் உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்குத் தான் இருக்கிறது"" என்ற மத்திய அரசின் வாதத்தை இப்போது வெளிவந்துள்ள தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், மீண்டும் மத்திய அரசு இதே கருத்தினைச் சொல்லிக் காலம் கடத்த அனுமதித்துவிடக் கூடாது. அதில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 
 

ஆகவே, காவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ள 16.2.2018ஆம் தேதியிலிருந்து 6 வாரங்களுக்குள் உருவாக்க நாம் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும். இங்கே இருக்கின்ற அனைத்துக் கட்சி தலைவர்களையும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அழைத்து சென்று பிரதமரைச் சந்தித்து முதலில் "காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்துக் கொடுங்கள்" என்று வலியுறுத்த வேண்டும். 
 

உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தவரை தமிழகத்திற்குக்  குறைக்கப்பட்டுள்ள தண்ணீரான 14.75 டி.எம்.சி.யை திரும்பப் பெறுவதற்கு என்ன வழி என்பது பற்றி அரசு சட்டரீதியாக ஆலோசித்து, அதனை அனைத்துக் கட்சிகளிடம் தெரிவித்து, ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். காவிரிநீர் பெறுவது குறித்த முயற்சிகள் ஒருபுறமிருக்க,  வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பது போல், "வாட்டர் செக்யூரிட்டி போர்டு" ஒன்று அமைத்து காவிரி நீர் சேமிப்பு, சிக்கனமாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும் நாம் ஈடுபட வேண்டும். 
 

மழை நீரைச் சேமித்து வைப்பது, வெள்ள காலங்களில் தண்ணீரைச் சேமித்து வைப்பது, குளம், ஏரிகள், ஆறுகள், அணைகள் போன்றவற்றை காலமுறை வாரியாகத் தூர்வாரி ஆழப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள "நீர்பாசனத்தை" பொதுப்பணித் துறையிலிருந்து பிரித்து, அதற்குத் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்றும்; வேளாண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கையினைத் தயாரித்து வெளியிட வேண்டுமென்றும் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி உரிமையை நிலைநாட்ட அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் முழுஅளவிலான ஆதரவை அளிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.