Skip to main content

ஜோதிகா அந்த வார்த்தை பேசிய காரணம் ? - நாச்சியார் விமர்சனம்  

Published on 17/02/2018 | Edited on 20/02/2018

சேது விக்ரம், பிதாமகன் விக்ரம், நந்தா சூர்யா, நான் கடவுள் ஆர்யா, அவன் இவன் விஷால் என சமூகத்தின் பார்வையில் சற்று  விசித்திரமாகத் தெரியும் பாத்திரங்களை தன் கதையின் மையமாக வைத்து  படத்தை நகர்த்தும் இயக்குனர் பாலா இந்தப் படத்திலும்  மெல்லிய கதையை எளிய மனிதர்களின் வாழ்க்கைப் பின்னணியில்,  அதே சமயம் தனக்கே உரித்தான கொஞ்சம் வன்முறையையும் கலந்து தந்திருக்கிறார். 

 

nachiar jyothika

வயதில் மைனர்களான ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா இருவரும் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவானா கர்ப்பமாகிறார். இருவரும் மைனர் என்பதனால் பிரச்சனை பெரிதாகி ஜி.வி.பிரகாஷ் மேல் வழக்கு  போடப்பட்டு சிறைக்குச் செல்கிறார். இந்த கேஸை காவல்துறை அதிகாரிகள் ஜோதிகாவும், ராக்லைன் வெங்கடேஷும் கையாள நேர்கிறது. அப்போது இந்த வழக்கைப் பற்றிய விசாரணையில் இவானா கர்ப்பத்திற்கு ஜி.வி.பிரகாஷ் காரணமில்லை என்ற உண்மை தெரிய வர, குற்றவாளி யார், அவரை ஜோதிகா என்ன செய்கிறார் என்பதே 'நாச்சியார்'. 

 

nachiar g.v.prakash

ஏற்கனவே பார்த்துப் பழகிய கதை தான் என்றாலும் பாலா தன் பாணியில் எதார்த்த மனிதர்களின் வாழ்க்கை பின்னணியில் தந்திருக்கிறார். போகிற போக்கில் முகத்தில் அறைந்து செல்லும் யதார்த்தங்களின் கலவையை மிக அழுத்தமான நக்கல், நய்யாண்டி என 'பாலா'த்தனமான வசனங்களோடு காட்டியிருக்கிறார். வழக்கம் போல் கதாபாத்திரங்கள் இவர் சொன்ன பேச்சைக் கேட்டு நடித்துள்ளார். அனைவரது நடிப்பிலும் பாலாவின் முகமே மேலோங்கித் தெரிகிறது.  படத்தில் ஒரே ஒரு பாடல், வேகமான திரைக்கதை, நீளம் குறைவு, என தன் சினிமா பாணியில் இருந்து கொஞ்சம் விலகி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் மனதைத் தாக்கி இதயத்தைப் பிழியும் ரணகள கிளைமாக்ஸ் இல்லாமல் சுமூகமாக  வைத்தது மிகவும் ஆறுதலாக உள்ளது. சில காட்சிகள் மெகா சீரியல் போல இருப்பது, சற்று அயர்ச்சி ஏற்படுத்துகிறது. ஜி.வி.பிரகாஷ் - இவானா காதல் காட்சிகள் மனதில் பதியும்படி  இல்லை.  
 

nachiar ivana

ஜோதிகா எப்போதும் போல் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். நேர்மையும், மனிதாபிமானமும், துணிச்சலும் நிறைந்த காவல்துறை  அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் அவர் நடிப்பில் வெகு சில இடங்கள் மட்டும் சற்று செயற்கையாகத் தெரிகிறது. மேலும் ஜோதிகா ட்ரைலரில், தன் சொந்த குரலில்  சொன்ன 'அந்த' வார்த்தை, படத்தை பார்க்கும் போது, அந்த இடத்தில் பேசியது அதிகமில்லை என்றே தோன்றுகிறது. ஜி.வி.பிரகாஷ் ஒன்றும் அறியாத 'காத்து' என்ற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.  சில இடங்களில் பிதாமகன் விக்ரமை நியாபகப்படுத்தினாலும் இதுவரை நாம் பார்த்த ஜி.வி வேறு, இவர் வேறு. புதுமுகம் என்று  சொல்லிவிட முடியாத அளவுக்கு நடிகை இவானா தேர்ந்த நடிப்பை  வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மிக இயல்பாக நடித்து கவனிக்க வைக்கிறார். இவர்களைத் தவிர பிற பாத்திரங்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை என்பது ஒரு குறை தான்.  

இளையராஜாவின் பின்னணி இசை, தேவையான இடத்தில் காட்சிக்குத்  தகுந்தாற்போல இசையோடும், இசையில்லாமலும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆனாலும் பாலா-இளையராஜா என்ற அந்த அதிர்வு இல்லை. ஈஸ்வரின் ஒளிப்பதிவு சென்னையை  இயல்பான வண்ணத்தில்  காட்சிப்படுத்தியுள்ளது.

நாச்சியார் - அளவான, அதிரடியான நல்லவள். 

சார்ந்த செய்திகள்

Next Story

'இருட்டு அறையில்' யார்... 'முரட்டு குத்து' யாருக்கு?

Published on 05/05/2018 | Edited on 08/05/2018

'இருட்டு அறையில் பயந்து போய் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ், முரட்டு குத்துக்காகக் காத்திருக்கும் பேய்' - அதிர்ச்சியடைய வேண்டாம், இது படத்தின் இடைவேளையின் போது வரும் வசனம். இதுதான் கதையும் கூட. 

 

IAMK1



"ஏன் உள்குத்தோடயே பேசுற?" "_______ ஒழுங்கா _______யிருந்தா நான் ஏன் உள்குத்தோட பேசப் போறேன்?"   

இது ஒரு சாம்பிள் வசனம்தான். இது போல ஒரு நூறு இரட்டை அர்த்த (ஒற்றைதான்) வசனங்களை எழுதிவிட்டு, அவற்றையெல்லாம் பொருத்த, காட்சிகளை எழுதியிருக்கிறார்கள்போல. அதுதான் படம். 'இஅமுகு'வை பொறுத்தவரை நமக்கு இரண்டு சாய்ஸ்கள்தான். ஒன்று, போஸ்டர், டீசர் எல்லாவற்றிலும் பார்த்தவுடனே தெரிந்துவிடுவது போல, இந்தப் படம் இப்படித்தான் இருக்குமென்பதை உணர்ந்து, 'இப்படிலாமா படம் எடுக்குறாய்ங்க? த்தூ...' என்று திட்டிவிட்டு கண்டுகொள்ளாமல் இருந்துவிடலாம். அல்லது லாஜிக், கதை, ரசனை, அழகியல் என எதையும் எதிர்பார்க்காமல், படத்தில் வரும் 'அந்த' வகை வசனங்களுக்கு சிரித்துவிட்டு வந்துவிடலாம். வேறு ஏதோ எதிர்பார்ப்போடு சென்று படத்தைப் பார்த்துவிட்டு, ஒழுக்கம், கலாச்சாரம் எக்ஸ்டராவெல்லாம் சிந்தித்துக் குறை கூறுவதில் ஒரு சாதாரண ரசிகருக்கு பலனில்லை. எனவே, 'ஹரஹர மஹாதேவகி' புகழ் சன்தோஷ் பி ஜெயக்குமாரின் இரண்டாவது படத்தை மேலே கூறப்பட்டுள்ள இரண்டாம் மோடில்தான் பார்த்தோம்.
 

iamk2

 

 


பெண்களை செக்ஸ் பொம்மையாகக் கருதுவது, ஒழுக்கம், காதலின் அர்த்தம், உறவு வரைமுறை, சுய பாலின ஈர்ப்பை கேலி செய்தல், 'குடி' காட்சிகள், இன்னும் என்னென்னவோ, அத்தனையையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பார்க்கத் தயாராகிய நம்மை இவர்களே சொல்லிக் கொள்வது போல 'அடல்ட் ஹாரர் மூவீ'யாகிய 'இஅமுகு' திருப்திப்படுத்தியிருக்கிறதா? (இந்த 'திருப்தி'க்கு வேறு அர்த்தங்கள் எதுவுமில்லை). ஒரு முரட்டு 'பிளேபாய்' ஆன கௌதம் கார்த்திக்கிற்கு பெண் தேடுகிறார்கள். பார்க்கும் பெண்களெல்லோருக்கும் கௌதம் பற்றி முன்பே தெரிவதால் ஏற்கவில்லை. ஆனால், வைபவி ஷாண்டில்யாவுக்கு பிளேபாய் என்பதாலேயே கௌதம் கார்த்திக்கைப் பிடிக்கிறது. இருவரும் பழகிப் பார்ப்பதற்காக, அவர்களது குடும்பங்களே அவர்களை பட்டாயா (தாய்லாந்து) அனுப்புகிறார்கள். துணைக்கு ஷாரா, அவரது கேர்ள் ஃப்ரெண்ட் யாஷிகா ஆனந்த் (இவரும் கௌதம் கார்த்திக்கின் முன்னாள் கேர்ள் ஃப்ரெண்ட்) இருவரும் வர, அங்கு அவர்கள் தங்கும் பங்களாவில், இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத புதுமையான, கொஞ்சம் எசக்கு பிசக்கான பேயிடம் சிக்கிக் கொள்கிறார்கள். பின் என்ன நடக்கிறது என்பதுதான் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.

கௌதம் கார்த்திக், பளீரென அழகாக இருக்கிறார். இந்தப் பாத்திரம் அவருக்கு எளிதாகவே பொருந்துகிறது. ஷாரா கத்திக்கொண்டே இருக்கிறார், வெகு சில நேரங்களில் சிரிக்க வைக்கிறார். வைபவி, யாஷிகா இருவரும் எதற்காக படத்திற்கு அழைக்கப்பட்டார்களோ அதை சிறப்பாகவே, அதிகமாகவே செய்திருக்கிறார்கள் (தவறாக எண்ண வேண்டாம், இதற்கும் ஒரே அர்த்தம்தான்). நடிப்பில் பாராட்டுவதற்கோ ஏமாறுவதற்கோ இந்தப் படத்தில் எதுவுமில்லை. ஏமாற்றம் யாருக்கென்றால், முழு காமெடி ரைடாக இருக்குமென்றோ அல்லது தெறிக்கவிடும் திகில் படமாக இருக்குமென்றோ நம்பி வந்தவர்களுக்குத்தான். மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், ஜாங்கிரி மதுமிதா, கருணாகரன், ஜான் என வரிசையாக காமெடியன்கள் வந்தும் அந்த அளவுக்கு வேலை செய்யவில்லை (காமெடிதான்). அதுவும் அந்த 'சமையல் மந்திரம்' புகழ் டாக்டரை 'நீங்க வந்தா மட்டும் போதும்' என்று சொல்லி அழைத்து வந்திருப்பார்கள் போல, திரு திருவென முழிக்கிறார். அதுபோல பேச்சுக்குக் கூட பேயைப் பார்த்து பயம் வரவில்லை. 'பிக் பாஸ்', 'சமையல் மந்திரம்' என சமீபத்திய டிவி ட்ரெண்டுகளைப் பயன்படுத்துவதில் இருந்த கற்பனை வளம், புதிய, ரசிக்கக் கூடிய அடல்ட் காமெடிகளை யோசிக்கவும் இருந்திருக்கலாம். இந்த வகையிலேயே 'சின்ன வீடு', 'நியூ' என சற்று விசயமுள்ள படங்களும் இருக்கின்றன.
 

 

iamk 4



இடைவிடாத அடல்ட் வசனங்கள், பாடல்களிலும் தொடர்கின்றன. மற்றபடி பாலமுரளி பாலு இசையமைத்துள்ள பாடல்கள் ஒரு பொருட்டாக நம் மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவு, கண்ணுக்கு இனிமையாக இருக்கிறது. படத்தின் கலர் ரிச்சாக இருப்பதற்கும், இந்தப் படம் ஒரு உப்மா படம் ஆகாமல் இருப்பதற்கும் முக்கிய காரணமாக பல்லுவின் ஒளிப்பதிவு இருக்கிறது. பிரசன்னாவின் படத்தொகுப்பு ட்ரெண்டியாக இருக்கிறது, படத்தை சுருக்கமாக முடிக்கிறது, இன்னும் நீளவிட்டிருந்தால் பிரச்சனைதான். தமிழ் படங்கள், சீரியல்களில் பார்த்த, சென்னையிலுள்ள பங்களாவை தாய்லாந்து பங்களா என பெரிதாக நெருடல் இல்லாமல் காட்டும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக படம் திடமாகவே இருக்கிறது. 

 


ஒரு பக்கம், ஒழுக்கம், கலாச்சாரம் என்ற பெயரில் பேசவேண்டியவற்றைக் கூட பேசாமல், தெரியவேண்டியது தெரியாமல் நாட்டில்  பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன. இன்னொரு பக்கம், இது போல வெளிப்படையாகப் பேசுகிறோம் என்று கூறிக் கொண்டு சரியான அணுகுமுறையில், பார்வையில் இல்லாமல் ஏதேதோ பேசப்படுகிறது. கோட்பாடு ரீதியாகவெல்லாம் விமர்சிக்க வேண்டாம், பொழுதுபோக்காகப் பார்ப்போமென்றாலும் கூட, சுவாரஸ்யம் கம்மியான, ஆங்காங்கே சிரிக்கவைக்கக் கூடிய படம்தான் இது. 'அப்புறம் தியேட்டர்ல கூட்டம், விசில், கொண்டாட்டமெல்லாம் இருக்கே, அதெல்லாம் என்ன?'னு கேட்டா, 'ஆமா, கண்டிப்பாக இருக்கிறது. சில வார்த்தைகளைக் கேட்டாலே, சில விஷயங்களைப் பார்த்தாலே பரவசம் அடையும், குதூகலமடையும் பதின் வயது, மற்றும் கல்லூரி செல்லும் இளைஞர்களின் சத்தம்தான் அது. 

இருட்டு அறையில் முரட்டு குத்து - பில்ட் அப் அதிகம், பெர்ஃபாமன்ஸ் குறைவு!      

 

Next Story

இந்தப் படத்தில் சிம்புவை எதுக்கு வம்பிழுத்தார்கள்? - ஏ.த.எ.வெ விமர்சனம்

Published on 26/02/2018 | Edited on 27/02/2018

"உங்களுக்கு பிடிச்ச படம் எதுங்க?" 
"இன்டெர்ஸ்டெல்லார்"   
"ஏங்க இன்ட்ரஸ்ட் இல்ல?"
 

"ஷூர் (sure) ...வேணுமா?
"சோறெல்லாம் வேணாங்க"
 

இதுபோன்ற நகைச்சுவை வசனங்கள் (?) ஒரு ஐம்பதை தாங்குபவர்களுக்கு, ரசிப்பவர்களுக்குத் தான், "ஏன்டா தலையில எண்ண வெக்கல?" படம். டீசர் வெளிவந்த பொழுது கவனிக்க வைத்த படம் எப்படி இருக்கிறது.

 

Yenda thalaila enna vekkala


என்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் பிரவீன் (அஸார்). சில ஆண்டுகள் மூத்த நண்பருடன் சேர்ந்து ஊரை சுற்றும் அவர், நல்ல வேலையில் இருக்கும் அழகான பெண்ணான நாயகி சஞ்சிதா ஷெட்டியைக் கண்டதும் காதல் வந்து, அவர் மூலமாகவே தனக்குப் பிடித்த நல்ல வேலையில் சேர்ந்து, திருமணமாக நிகழ இருக்கும் நிலையில், ஒரு எதிர்பாராத சோதனை. எமதர்மராஜன், குலுக்கல் முறையில் இவரைத் தேர்ந்தெடுத்து, 'நான் கொடுக்கும் நான்கு டாஸ்க்குகளைநீ முடித்தால் தான் உயிரோடு விடுவேன்" என்று சொல்ல, டாஸ்க்குகளை வெற்றிகரமாக முடித்தாரா, திருமணம் நடந்ததா என்பதே கதை.
 

படத்தின் கதை வேலையில்லாத என்ஜினியர் நாயகனைப் பற்றியது என்றாலும், அத்தனை திறமையும் இருந்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்று காட்டாமல் உண்மை நிலவரத்தைக் காட்டியது ஆறுதல். பெரும்பாலும் வசனங்களாகவே எழுதப்பட்டிருக்கும் நகைச்சுவைகளில் ஆங்காங்கே சில நம்மை சிரிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் யோகி பாபு பகுதியில் அரங்கு சிரிக்கிறது. ஆனாலும், அதுவும் ஆரோக்கியமான நகைச்சுவையாக இல்லை. 

 

yenda thalaila enna vekkala2


சின்னத்திரை மிமிக்ரியில் புகழ் பெற்ற திறமைசாலியான அஸாருக்கு பெரிய திரையில் முதல் படம். அவர் ஓரளவு நன்றாக நடித்திருந்தாலும், மிமிக்ரி கலைஞர்களுக்கே உரிய சவாலானது இவரையும் சோதிக்கிறது. ஆங்காங்கே தெரியும் விஜய் சாயல் துருத்திக்கொண்டு இருக்கிறது. அதைக் கடக்க வேண்டும் அவர். சஞ்சிதா ஷெட்டி, வழக்கமான நாயகி பாத்திரத்தைத் தாண்டி பெரிதாக வேலையில்லை என்பதால், அதற்கேற்ப வந்து போகிறார். நண்பனாக வரும் சிங்கப்பூர் தீபன், காமெடி கவுண்டர்கள் கொடுத்து சிரிக்கவைக்க முயன்றிருக்கிறார், பெரிதாக வேலை செய்யவில்லை. ஒரு காட்சியில், சிம்புவின் குரலில் இரட்டை அர்த்தமாக பேசும் ஒருவருக்கு 'பங்க்சுவாலிட்டி பரமசிவம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். என்ன காரணமோ?   

 

yenda thalaila enna vekkala 3


படத்தின் கதை தொடங்கும் இடம், இடைவேளைக்கு சற்று முன் வருகிறது. அங்கு ஏற்படுத்திய ஆர்வத்தை வெகு விரைவிலேயே கரைய வைத்துவிடுகின்றன அடுத்து வரும் காட்சிகள். நாயகனுக்கு எமனால் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில், பாட்டியிடம் அடி வாங்க வேண்டுமென்பது மட்டும் சுவாரசியம். மற்றவை ம்...ஹ்ம்ம்...  படம் முழுவதிலும் தெரியும் நாடகத்தன்மை, சின்ன பட்ஜெட் படம் என்ற உணர்வு இரண்டும் எதிர்மறையாக வேலை செய்கின்றன. 'லென்ஸ்' போன்ற படங்களும் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவையே. தொழில்நுட்ப சமாதானங்கள் படத்தை பாதிக்கின்றன. ஏ.ஆர்.ரெஹைனாவின் பின்னணி இசை சற்று ஓவர் டோஸ். பாடல்கள் படத்தோடு கடந்து செல்கின்றன. 

ஒரு கட்டத்தில் வாட்ஸ்-அப்பில் வலம் வந்த எழில்-க்ளாட்வின்-கௌரி கதையை காமெடியாக வைத்துள்ளார்கள். ட்ரெண்டிங் விஷயங்கள் பலவற்றையும் படத்தில் சேர்த்த கவனத்தை ட்ரெண்டில் இருக்கும் பாணியில் காமெடி வைக்கவும் செலுத்தியிருக்கலாம்.