Skip to main content

விஷாலை ஏமாற்றி 45 லட்சத்தைச் சுருட்டிய பெண் கணக்காளர்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

vishal

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால், விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். 'சக்ரா' மற்றும் 'துப்பறிவாளன் 2' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறார்.
 

இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மேனேஜராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதில், ரம்யா என்பவர் தங்கள் நிறுவனத்தை ஏமாற்றி பணம் கையாடல் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
 

அந்தப் புகாரில், 2015ஆம் ஆண்டு முதல் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் ரம்யா என்பவர் கணக்காளராகப் பணிபுரிந்து வருவதாகவும், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் சில ஆண்டுகளாக வருமான வரித்துறைக்குச் செலுத்தச் வேண்டிய TDS தொகையை அவர் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் TDS தொகையினை தனது கணக்கிலும், கணவர், உறவினர் கணக்கிலும் பணத்தைப் பரிமாற்றம் செய்து ரம்யா மோசடி செய்துள்ளதாகவும் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


விஷால் தயாரிப்பு நிறுவனத்திடம் TDS தொகையினைக் கட்டிவிட்டதாக போலி ஆவணங்களையும், வங்கி விவரங்களையும் காட்டி மோசடி செய்துவிட்டதாகவும் அந்தப் புகார் மனுவில் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அலுவலக இ-மெயில் முகவரி மற்றும் அலுவலக கணிப்பொறியில் உள்ள முக்கியமான ஃபைல்களை அழித்துவிட்டதாகவும், தினசரி வரவு-செலவுக் கணக்குகளிலும் ரம்யா முறைகேடு செய்துள்ளதாகவும் ஹரிகிருஷ்ணன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறு ரம்யா மோசடி செய்த தொகை சுமார் 45 லட்ச ரூபாய் இருக்கும் எனவும், அதையும் தாண்டி மோசடி செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ரம்யாவிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவிப்பதாகவும், ஜூன் 28ஆம் தேதி அனைத்துக் கணக்கு வழக்குகளையும் ஒப்படைப்பதாகக் கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்