Skip to main content

“பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது...” -விஷால் பாராட்டு!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

vishal

 

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் பல கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார்.


அண்மையில் கூட, மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.


இதுபெரும் சர்ச்சையாக உருமாற, சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அச்சமாக இருந்தால் மும்பைக்கு வரவேண்டாம் என விமர்சித்திருந்தார்.


அவரது கருத்துக்கு பதிலளித்த கங்கனா, மும்பை என்பது சிவசேனா கட்சி மட்டுமல்ல எனக் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், 9 ஆம் தேதி நிச்சயம் மும்பைக்கு வருவேன் எனவும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.


இமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனாவிற்கு, ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
 

இந்நிலையில் மும்பை மாநகராட்சி விதிகளை மீறி கங்கனா அலுவலகம் கட்டியுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்திருந்தது. இதன்பின் அவரது அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகளைக் கொண்டு, புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியுள்ளனர். இதனிடையே மும்பைக்கு புறப்பட்டார் கங்கனா. மேலும் அவரது அலுவலகத்தை இடித்துத் தள்ளும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, சிவசேனா அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 


இந்நிலையில் நேற்று மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களே, நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? திரைப்பட மாஃபியாக்களுடன் இணைந்து எனது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கி விட்டதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும். காலத்தின் சக்கரங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன” என்று கூறியுள்ளார். 

 

Ad

 

இந்நிலையில் கங்கனாவை பாராட்டி விஷால் ட்வீட் செய்துள்ளார். அதில்,

"அன்பார்ந்த கங்கணா, உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை. இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும், அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டும் வலிமையாக இருந்தீர்கள். அது உங்களை மிகப்பெரிய உதாரணமாக்குகிறது.

 

1920-களில் பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது நீங்கள் செய்திருக்கும் காரியம். பிரபலமாக இருந்தால் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு உதாரணமாக இருக்கும்.

 

உங்களுக்கு என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்