Skip to main content

'வாரிசு' இசை வெளியீட்டு விழா - ஆவலுடன் ரசிகர்கள்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

varisu audio launch is held at chennai

 

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விஜய் குரலில் வெளியான இப்பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். 

 

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இருந்து பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

 

பொதுவாக விஜய் படத்தின் ஆடியோ விழாவில், விஜய்யின் பேச்சை கேட்பதற்கு அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்வார்கள். ஆனால் இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தின் விழாவில் சில காரணங்களால் அவரது ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து வெளியான 'பீஸ்ட்' படத்திற்கு ஆடியோ விழா நடத்தப்படவில்லை. அதனால் 'வாரிசு' பட ஆடியோ விழாவிற்கு விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்