Skip to main content

லட்சத்தீவு பிரச்சனை பற்றி பேசிய பெண் நடிகை மீது மத்திய அரசு தேசத்துரோக வழக்கு!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

vdgdagsd

 

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு, கேரளக் கரைக்கு 200 கி.மீ தொலைவில் அரபிக் கடலில் அமைந்துள்ளது. மீன்பிடித் தொழிலும், சுற்றுலாவும் இங்கு பிரதான தொழிலாக இருக்கும் நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம்வரை லட்சத்தீவின் நிர்வாகியாக இருந்த ஐ.பி.எஸ் தினேஷ்வர் ஷர்மா எதிர்பாராதவிதமாக காலமானதையடுத்து, இந்திய அரசு புதிய நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேல் என்பவரை லட்சத்தீவின் நிர்வாகியாக நியமித்தது. இதற்கு முன்புவரை லட்சத்தீவின் நிர்வாகியாக ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்.கள் மட்டுமே நியமிக்கப்பட்ட நிலையில், ஒரு அரசியல்வாதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து அவர் கொண்டுவந்த ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் அந்த ஊர் மக்களைப் பெரிதும் கவலையடையச் செய்திருக்கிறது. 

 

என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி லட்சத்தீவில் இதுவரை கொலை, கொள்ளை, கடத்தல் என ஒரு குற்றம் கூட பதியப்படாத நிலையில், தற்போது குண்டாஸ் சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. லட்சத்தீவில் இதுவரை மதுபானங்களுக்குத் தடை நிலவிவந்த நிலையில், தற்போது மதுபான விற்பனையைத் தொடங்க முடிவெடுத்துள்ளது புதிய அரசு. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த தீவில் மாட்டுக்கறிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களில் பணிபுரிந்த சில ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்புமின்றி நீக்கியுள்ளது. மேலும் கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால், இரண்டு நாட்களுக்குள் லட்சத்தீவிற்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார் பிரஃபுல் கோடா பட்டேல். ஜனவரிவரை ஒரு கரோனா தொற்றுகூட இல்லாத தீவாக இருந்த லட்சத்தீவில், தற்போது 5000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

இப்படியான பல பிரச்சினைகள் லட்சத்தீவில் தொடர்வதையடுத்து, அங்குள்ள மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர். மேலும், அங்கு இதற்கு எதிராகப் போராட்டங்களும் வெடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் லட்சத்தீவு காப்பாற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், லட்சத்தீவின் சேதியாத் தீவைச் சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. மாடலும், இயக்குநரும், நடிகையுமான ஆயிஷா சுல்தானா, சமீபத்தில் கலந்துகொண்ட தொலைக்காட்சி விவாதத்தின்போது... 

 

லட்சத்தீவில் கரோனா தொற்று பரவுவதற்கு மத்திய அரசு 'உயிரியல் ஆயுதங்களைப்' பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, ஆயிஷா சுல்தானா தவறான செய்திகளைப் பரப்பியதாக, லட்சத்தீவின் பாஜக தலைவர் அப்துல் காதர் கவரட்டி போலீசில் ஆயிஷா மீது புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சரியாக வழக்குப் பதியவில்லை. இதனால் ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சுல்தானா மீது, லட்சத்தீவு போலீசார் 124 ஏ மற்றும் 153 பி ஆகிய பிரிவுகளின் கீழ் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்