Skip to main content

“எங்க பார்த்தாலும் ‘ஜெய் பீம்... ஜெய் பீம்’னு சொல்ல வச்சுட்டீங்க..” - சூர்யா நெகிழ்ச்சி

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

surya talk about jai bhim movie

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் இப்படம் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டதுடன், சர்வதேச அரங்கில் பல்வேறு விருதுகளையும் பெற்றது. 

 

இந்நிலையில் 67 வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த சமூக கருத்து (Best Social Message Film Award) படத்திற்கான விருதை ஜெய் பீம் பெற்றுள்ளது. இவ்விருதை படக்குழுவினருடன் இணைந்து சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பெற்று கொண்டனர். இதன் பிறகு பேசிய சூர்யா, “'ஜெய் பீம்'மை உங்கள் படமாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. முதலில் எங்களுக்கு சிறிய பயம் இருந்தது. தீபாவளிக்கு ரிலீஸ் பண்றோம், இந்த மாதிரி ஒரு படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா என்று. ஆனால் படம் வெளியாகி, அதை அப்படியே மாற்றி விட்டது. படத்தை பார்த்து விட்டு கொண்டாடத் தொடங்கி விட்டீர்கள். குறிப்பாக இளைஞர்களிடம் இருந்து வந்த அன்பு ரொம்ப பெரியது. இந்த படத்தை ஒரு தமிழ் படமாக பார்க்காமல், மொழியை கடந்து, அனைத்து மக்களும் கொண்டாடியதற்கு நன்றி. என்னுடைய பழைய படங்களை எல்லாம் மறந்து விட்டார்கள், ஏனென்றால் எங்கு சென்றாலும் 'ஜெய் பீம்... ஜெய் பீம்'ன்னு சொல்ல வைத்துவிட்டீர்கள். நீங்கள் இல்லாமல் இது நடந்திருக்காது. இதற்கு முக்கிய காரணமான இயக்குநர் த.செ ஞானவேலுக்கு நன்றி” என நெகிழ்ச்சியாக கூறினார். 

 

மேலும் இவ்விழாவில் ஜெய் பீம் படத்தில் நடித்ததற்காக லிஜோ மோல் ஜோஸுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. 
 

 

சார்ந்த செய்திகள்