Skip to main content

24 மணி நேரத்தில் 500 மிரட்டல்கள்... நடிகர் சித்தார்த் பரபரப்பு ட்வீட்!

Published on 29/04/2021 | Edited on 30/04/2021

 

Siddharth

 

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக செயல்பட்டு வரும் நடிகர் சித்தார்த், சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துத் தெரிவிப்பது வழக்கம். கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் இந்தியாவில் நிலவிவரும் நெருக்கடிநிலை குறித்தும் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துவருகிறார். ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக உத்திரபிரதேச அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார். யோகி ஆதித்யநாத்தின் அந்த  கருத்தை கண்டித்து சித்தார்த் கூறிய எதிர்க்கருத்து தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக நிர்வாகி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சித்தார்த் மீது புகாரளித்துள்ளார். 

 

சித்தார்த் தெரிவித்த கருத்துக்கு பாஜக ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தனக்கு 500 மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"தமிழக பாஜக உறுப்பினர்களாலும் அவர்களது ஐ.டி விங்கை சேர்ந்தவர்களாலும் என்னுடைய அலைபேசி எண் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வசை, பாலியல் மற்றும் கொலை மிரட்டல்கள் என 500 அழைப்புகள் வந்துள்ளன. அனைத்து எண்களும் பதிவு செய்யப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்படும். நான் பேசுவதை நிறுத்தமாட்டேன். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்