Skip to main content

இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் சொன்ன குட்டிக்கதை

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

 A short story told by Bhagyaraj at the audio launch event

 

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் - அல் முராட் & சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை ரத்தன் லிங்கா எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர். 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலை பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். 'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது வாழ்வில் பிரச்சனைகள் வருவது பற்றி ஒரு குட்டிக் கதையும் சொன்னார். இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதில், “படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும்போது பல்வேறு சிரமங்கள், இடைஞ்சல்களைச் சந்தித்துத்தான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்துகொண்டு தான் இருக்கும். அதையும் தாண்டித்தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. 

 

மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டிவிட்டு திருடப் போவார்கள். ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படிப் பலநாள் எதுவும் கிடைக்கவில்லை. அன்று வேண்டும்போது, இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள். அன்றும் ஒன்றுமே கிடைக்காதுபோகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். ஆனால், மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்துவிட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்தக் கல்லைத் தூக்கிக் கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான்.

 

அதே நேரத்தில் கண் வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார். தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே! நான் கல்லை கோயிலைத் தாண்டித்தானே வீசினேன்! என்றான். எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா? என்றான். அதற்கு விநாயகர், நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றுதான் நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார். அதுபோல இடையூறுகள் எப்படியென்றாலும் வாழ்வில் வந்தே தீரும்.” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்