பல்வேறு படங்களின் மூலம் திரையுலகில் தன்னுடைய முத்திரையைப் பதித்த நடிகர் சம்பத் ராம் அவர்களோடு ஒரு நேர்காணல்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு தனியார் வங்கியில் பணியாற்றினேன். முதல்வன் படத்தில் தான் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பட வாய்ப்புக்காக வேலையை ராஜினாமா செய்தேன். மக்கள் கூட்டத்தை கண்ட்ரோல் செய்யும் போலீஸ் அதிகாரியாக அந்தப் படத்தில் நடித்தேன். இனி சினிமாதான் என்று முடிவு செய்தேன். ஒருகட்டத்தில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் விற்கும் சூழ்நிலைக்கு வந்தேன். அப்போது என்னுடைய மாமனார் எனக்கு ஆதரவாக இருந்தார்.
ஒரு தனியார் ஸ்டூடியோவில் பகுதி நேர வேலையும் பார்த்தேன். அதன் மூலம் பல இயக்குநர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிப்பதற்கு வாய்ப்பு கேட்கவும் அது எனக்குப் பயனுள்ளதாக அமைந்தது. இப்போதுவரை அந்தப் பணியில் நான் தொடர்கிறேன். கபாலி படத்தில் ரஜினி சாரின் நண்பராக நடிக்கும் பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கினார் பா.ரஞ்சித் சார். ஸ்டூடியோ வேலை தொடர்பாக லோகேஷ் கனகராஜ் சாரை சந்திக்கச் சென்றபோது தான் விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் சேதுபதியின் சகோதரர் பாத்திரத்தை ஏற்றேன்.
கபாலி படத்தில் ரஜினி சார் ஒரு காட்சியில் என்னுடைய பெயரைச் சொல்லி அழைத்தது சர்ப்ரைசாக இருந்தது. ஆரம்பகட்டத்தில் சினிமா உலகம் குறித்த புரிதல் எனக்கு அவ்வளவாக இல்லை. ஒருமுறை என்னை விட உயர்ந்த கேட்டகிரி டெக்னீசியன்கள் சாப்பிடும் இடத்தில் சென்று சாப்பிட அமர்ந்தபோது அங்கிருந்து என்னை விரட்டி விட்டனர். அது எனக்குப் பெரிய அவமானமாக இருந்தது. அதன்பிறகு செட்டில் சாப்பிடுவதையே நிறுத்தினேன். சினிமாவில் என்னை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒருமுறை விஜய் சேதுபதி வருத்தப்பட்டார். நல்ல இதயம் கொண்ட மனிதர் அவர்.
விக்ரம் பட ஷூட்டிங்கில் லோகேஷ் கனகராஜ் சார் அனைத்தையும் தானே நடித்துக் காட்டுவார். சத்ரபதி படத்துக்கு கால்ஷீட் கொடுத்து, அந்த ஷூட்டிங் தாமதமானதால் அந்த இடைவெளியில் வசூல்ராஜா படத்தில் நடிக்கப் போனேன். 10 நாட்கள் நடித்த பிறகு சத்ரபதி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதால் வசூல்ராஜா படத்தில் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. அது எனக்குப் பெரிய வலியாக இருந்தது. நான் மிகவும் ஜாலியாக செய்த படம் என்றால் அது வசூல்ராஜா தான்.
விருமாண்டி படத்தின் போட்டோ ஷூட்டில் நான் பங்குபெற்றேன். ஆனால் அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வரவில்லை. வசூல்ராஜா பட நிகழ்வை கமல் சார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவில் வசூல்ராஜா நிகழ்வுக்காக கமல் சாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன்.