இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வந்து இஸ்ரோவியர்க்கு தகவல்களை தந்து கொண்டிருக்கிறது.
இந்த வரலாற்று சாதனை படைத்த சந்திரயான் - 3, திட்டத்துக்கு இயக்குநராக, தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நடிகர் ரோபோ ஷங்கர் வீரமுத்துவேல் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தாரை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழகத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "என்னிடம் கேட்டால் நான் என்று தான் சொல்வேன். என்னை விட்டுவிடுங்கள். தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் என வீரமுத்துவேலை தான் சொல்வேன்" என்றார். உடனே அருகில் இருந்தவர்கள் கைதட்டினர். தொடர்ந்து பேசிய அவர், "இதை விட ஒரு பெருமை என்ன இருக்கப் போகிறது. அப்துல் கலாம் வாழ்ந்த நாட்களில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது ரொம்ப பெருமையான ஒரு விஷயம். அவரைப் பார்க்க கூடிய வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. அவருடைய நகலாக வீரமுத்துவேலைப் பார்க்கிறோம். அவரது தந்தையையும் அப்படித்தான் பார்க்கிறோம். இவர்களைப் பார்த்து வளர்கிற தலைமுறைகள் இவரைப் போன்று வளரவேண்டும் என்பது என் ஆசை" என்றார்.