நக்கீரன் ஸ்டூடியோ சேனலுக்காக நடிகர் ரமேஷ் திலக் அவர்களை சந்தித்தோம். நமது பல்வேறு விதமான கேள்விகளுக்கு சுவாரசியமான பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
ரமேஷ் திலக் பேசியதாவது: “எந்த கேரக்டர் செய்தாலும் அது நமக்குப் பிடித்ததாக அமைய வேண்டும். யானைமுகத்தான் படத்தில் என்னுடைய கேரக்டரை யோகிபாபுவும், அவருடைய கேரக்டரை நானும் செய்ய வேண்டியதாகத்தான் முதலில் இருந்தது. அதை நாங்கள் மாற்றிக்கொண்டோம். இந்தப் படத்துக்காக நாங்கள் மேற்கொண்ட ஒன்றரை வருடப் பயணம் மறக்க முடியாதது. யோகிபாபுவும் நானும் இன்றும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். யோகிபாபு ஒரு மிகப்பெரிய ஆன்மீகவாதி. தமிழ்நாட்டில் அவர் செல்லாத கோவில்களே இல்லை என்று சொல்லலாம். ஆன்மீக சித்தாந்தம் பற்றி நிறைய பேசுவார். கோவில்கள் பற்றி நம்மிடமும் நிறைய பகிர்ந்துகொள்வார்.
சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இன்னும் முடிவாகவில்லை. டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஒரு சிறிய ரோல் செய்துள்ளேன். விஜய் சேதுபதி சார் எனக்கு நல்ல நண்பர். அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு அவர் தமிழிலும் இந்தியிலும் பிசி.
கமல் சாரோடு நான் நடித்ததற்கு லோகேஷ் கனகராஜுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பெரிய படங்கள் செய்த பிறகு பொறுப்பும் அதிகமாகிறது. மாஸ்டர் படத்தின்போது விஜய் சார் எங்களோடு நிறைய பேசுவார். புதிய படங்கள், வெப்சீரிஸ் குறித்தெல்லாம் பேசுவார். அஜித் சார் ஒரு ஜென்டில்மேன். லோகேஷ் கனகராஜின் உழைப்பு அபாரமானது. அவரிடம் 18 அசிஸ்டண்ட் டைரக்டர்கள் இருக்கிறார்கள். காலேஜ் வாழ்க்கை போல் இருக்கும் அவர்களுடைய வாழ்க்கை. அவரிடம் ஒரு சிறந்த தலைமைப் பண்பு இருக்கிறது. எப்போதும் கூலாக இருப்பார்.