Skip to main content

”சாதிய, மத வக்கிரங்களைத் தூண்டும் படங்களுக்கு மத்தியில் இது மக்களுக்கான படம்” - அப்துல் கலாம் அறிவியல் ஆலோசகர் பாராட்டு

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

ponraj

 

ரவியரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஐங்கரன் திரைப்படம், கடந்த 12ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில்,  அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ் ஐங்கரன் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். 

 

இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொன்ராஜ், ”ஐங்கரன் படம் பார்த்தேன். உண்மையிலேயே அற்புதமான படம். விஞ்ஞானிகளை உருவாக்கக்கூடிய படமாக இந்தப் படம் உள்ளது. புதுக்கண்டுபிடிப்பை உருவாக்கி இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும் என்று நினைக்கூடியவர்கள் குறைவு. அவர்கள் படக்கூடிய கஷ்டம் எப்படிப்பட்ட கஷ்டம் என்பதை ஐங்கரன் படத்தில் மிகத்தெளிவாக காட்டியிருக்கிறார்கள். படத்தின் இயக்குநருக்கு பாராட்டுகள். ஆற்றல் மிக்க ஓர் இளைஞன் தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் பெற எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்பதை நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார். 

 

மூன்று வருடங்களுக்கு முன்பாக சுஜித் என்ற குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து எப்படி மரணித்தது என்பதை நாம் கண் கூடாக பார்த்தோம். இந்தப் படம் முன்னரே வெளிவந்திருந்தால் அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டிருக்குமோ என்று நினைக்கிறேன். புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு அதிகாரிகள், அமைச்சர்கள் மரியாதை கொடுப்பதில்லை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மிக முக்கியமான படம் ஐங்கரன். அரசு இயந்திரத்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்க முடியாது. எவனொருவன் சிந்திக்கிறானோ அவனிடத்தில்தான் தீர்வு இருக்கிறது. அவன் சாதாரண கிராமத்தில் கூட இருக்கக்கூடும். அவர்களை அரசு தேடவேண்டும். சாதிய, மத வக்கிரங்களைத் தூண்டி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்பதற்காக படங்கள் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், மக்களுக்கு பயன்படக்கூடிய வகையிலான படத்தை இவர்கள் எடுத்துள்ளார்கள். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்தப் படத்தை பார்த்து நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்