Skip to main content

தன்னுடைய அடுத்த படம் குறித்து மிஷ்கின்... 

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் லண்டனில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டுவிட்டார் என்று அண்மையில் தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. மேலும் மிஷ்கின் ஏன் துப்பறிவாளன் படத்திலிருந்து விலகினேன் என்பதற்கு விளக்கம் தருவதுபோல ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், விஷால் சாட்டிலைட்டிலிருந்து குதிப்பதுபோல ஒரு சீன் யோசித்திருக்கிறேன் அதற்காக நூறு கோடி பட்ஜெட் கேட்டேன் என்று கிண்டலடிப்பதுபோல சொல்கிறார்.
 

myskin

 

 

இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தின் வெற்றி குறித்தும் அடுத்த படம் குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

“இதை மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட 'அளவில்லாத அன்பு' என்றே கூறுவேன். படத்தைப் பார்த்த மக்கள் எடுத்துச் சென்றதும், கொடுத்ததும் அதுதான். எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகை பின்புலத்தில் கதை சொன்னாலும், பார்க்கும் பார்வையாளன் உணர்வுபூர்வமாக உணர்ந்தால் மட்டுமே, அதனைக் கொண்டாடுவான்.

நான் இந்தப்படங்களைக் கண்மூடித்தனமான நம்பிக்கையில்தான் உருவாக்கினேன். ஆனால், இறுதியில் அளவிலா அன்பைப் பெற்றிருக்கிறேன். 'கண்மூடித்தனமான நம்பிக்கை, ஆத்மாவின் தேடல்' இரண்டும்தான் வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தம் என்பதை நம்புபவன் நான். உண்மை என்னவெனில் எனது 'பிசாசு' நாயகன் சித்தார்த், 'துப்பறிவாளன்' கணியன் பூங்குன்றன், 'சைக்கோ' கௌதம் அனைவரும் இந்த மந்திரத்தை நம்புபவர்களே.

ரசிகர்கள் இதனை வாழ்வின் அன்பாக எடுத்துச் செல்ல வேண்டுமென்பதே என் விருப்பம். நான் வெகு பணிவுடன் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் பணிபுரிந்த நடிக, நடிகையர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விமர்சகர்கள், என் வளர்ச்சியை விரும்பும் அன்பு உள்ளங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனக்குத் தனித்துவ வெற்றி தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் அனைவரையும் மகிழ்விக்கும் திரைப்பயணத்தைத் தொடர விரும்புகிறேன். மிக விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

பலரும் இதில் துப்பறிவாளன் 2 படம் குறித்து மிஷ்கின் எதுவும் தெரிவிக்காததால் தான் துப்பறிவாளன் 2 வில் இல்லை என்பதை சூசகமாக தெரிவிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். அந்த படத்தின் தயாரிப்பாளர் விஷால்தான் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை தர வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்