Skip to main content

தனுஷ் படம் தொடர்பான கேள்வி - அமைச்சர் துரைமுருகன் பதில்

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

minister durai murugan about dhanush captain miller shooting issue

 

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வந்தது. இரவு நேரப் படப்பிடிப்பின் போது ராட்சத உபகரணத்தை படக்குழு பயன்படுத்தி வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததாகச் சொல்லப்பட்டது.

 

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படக்குழுவுக்கு எதிராகப் புகார் மனு கொடுத்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த மாதம் மத்தளம்பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எழுப்பிய சத்தம் மற்றும் புகை மூட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

 

இதனைத் தொடர்ந்து மத்தளம்பாறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து படக்குழு ஒப்புதல் பெற்றிருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும் படப்பிடிப்பு பழையபடி மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது நீர்நிலைகளைப் பாதிக்கும் வகையில், தென்காசியில் படப்பிடிப்பு நடத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நீர்நிலைகளை அடைத்து சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கக்கூடாது. யார் அனுமதி வழங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணையில் தவறு இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்