Skip to main content

ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட நபருக்கு மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு - நடிகை குமுறல்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

kerala actress Nandita bus issue

 

கேரள மாநிலம், கொச்சி அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் நந்திதா. மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த நந்திதா கடந்த மாதம் திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு பேருந்தில் சென்றார். அப்போது அவர் அருகே இருந்த ஒரு வாலிபர் திடீரென தனது கீழாடையை கழட்டி ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டார். இதைப் பார்த்த நந்திதா அதனை வீடியோ எடுத்து அவரை கண்டித்துள்ளார். மேலும் பேருந்து நடத்துநரிடம் புகார் செய்தார். உடனே அந்த இளைஞர் பேருந்தில் இருந்து தப்ப முற்பட்டபோது நடத்துநர் துரத்திப் பிடித்து நெடும்பாசேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

 

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அந்த இளைஞரின் பெயர் ஸவாத் (27) என்றும் அவர் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பின்பு அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே நந்திதா செய்த செயலுக்கும் பேருந்து நடத்துநருக்கும் பாராட்டு குவிந்தது. இந்நிலையில் கைதான ஸவாத், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த அவரை கேரள ஆண்கள் சங்கம் மாலை அணிவித்து பிரமாண்டமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ, தற்போது அது சர்ச்சையாகி உள்ளது. 

 

இது குறித்து பேசிய நந்திதா, "ஸவாத்தை மிகவும் பிரமாண்டமாக வரவேற்க அவர்கள் எடுத்த முடிவு அவரை ஒரு வகையான நினைவுச் சின்னமாக மாற்றியுள்ளது. இவர்கள் தான் பாலியல் குற்றவாளிகளைத் தொடர்ந்து ஆதரிக்கின்றனர். பலாத்காரம் செய்பவர் ஜாமீனில் வந்தால் அவருக்கு மாலை அணிவிப்பார்கள். ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டால் கவலைப்பட மாட்டார்கள்" என்றுள்ளார்.

 

கேரள ஆண்கள் சங்கம், ஸவாத் கைதான சமயத்தில், "இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நடிகை நந்திதா பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார்" எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்