Skip to main content

"எம்.ஜி.ஆரை பற்றி மட்டும் தான் பேசுவாங்க" - கார்த்தி

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

karthi about actress vasantha

 

பழம்பெரும் நடிகை வசந்தா (82) காலமானார். எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடகக் குழுவில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்த இவர், பின்பு திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். 1965 ஆம் ஆண்டு வெளியான 'இரவும் பகலும்' படத்தில் ஜெயசங்கருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். பின்பு  அதே ஆண்டு வெளியான 'கார்த்திகை தீபம்' படத்தில் அசோகனுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி மற்றும் கமல் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு அம்மாவாக 'ராணுவ வீரன்' படத்திலும் ஸ்ரீதேவிக்கு அம்மாவாக கமல் நடித்த 'மூன்றாம் பிறை' படத்திலும் நடித்தார். 

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வசந்தா சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (19.05.2023) மாலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி இன்று காலை வசந்தாவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதை எதிர்பார்க்கவே இல்லை. 6 மாதத்துக்கு முன்னால் பார்த்த பொழுது கூட ஆரோக்கியமாக இருந்தாங்க. எப்போவுமே பாசமா இருக்கிற ஒருத்தவங்க. நடிகர் சங்கத்துக்கு நாங்க வந்த பிறகு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க. நேரில் பார்க்கும் பொழுது எம்.ஜி.ஆரை பற்றி மட்டும் தான் பேசுவாங்க. எம்.ஜி.ஆருடன் அவங்க சின்ன வயதில் வளர்ந்ததால் நடிகர் சங்கத்துக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவு பண்ணியிருக்கார் என்பதை சொல்லுவாங்க. நீங்களும் நல்லா பண்ணுவீங்க, நிச்சயம் நல்லது நடக்கும், தைரியமா இருங்க என்று தவறாமல் சொல்லுவாங்க. எப்பவுமே ஒரு பாசமுள்ள தாயுள்ளம் கொண்டவரா அவர்களை பற்றிய நினைவு இருந்துகிட்டே இருக்கும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்