தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா. இவர் தொடர்ந்து இரண்டு முறை லோக் சபாவிற்கும், ஒரு முறை ராஜ்ய சபாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் திரையரங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. தொகையை அரசு காப்பீட்டுக் கழகத்தில் செலுத்தவில்லை எனத் தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து அரசு காப்பீட்டுக் கழகத்தின் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடந்த விசாரணையில் ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு வருகிற 18 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.