Skip to main content

"தமிழக மாணவர்களோடு நிற்போம்" - ஜி.வி பிரகாஷ்  

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

gv prakash support govt school students

 

இந்தியாவில் கல்வித் தரத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது.  இதற்கு காரணம் அரசு பள்ளிகள் தான். மாணவர்களின் ஆரம்ப காலத்தில் இலவசமாக தரமான கல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்கு புகட்டி அறிவுசார்ந்த கட்டமைப்பை மாணவர்கள் மத்தியில் உருவாக்குகிறது. இதனால் பள்ளி படிப்பை தொடர்ந்து உயர் கல்வியை முடித்த மாணவர்கள் இந்தியாவை தாண்டி உலக அளவில் பல்வேறு பொறுப்புக்களில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்தவர்களே பெரும்பாலான உயர் பதவிகளில் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக அரசு பள்ளி தரம் குறைந்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து வருவதால்  அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் குறைந்து வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. 

 

இந்நிலையில் அரசு பள்ளிக்கு ஆதரவாக திரை பிரபலங்கள் பலரும் களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் ட்விட்டரில் #GovtSchoolStudent என்ற ஹேஷ்டேக்குடன் அரசு பள்ளியில் படித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து பெற்றோர்கள் அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், என் இனிய தமிழ் மக்களே நம் குழந்தை செல்வங்களை தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்கல்விவரை தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிற்றுவித்து அரசு வேலைவாய்ப்புகளிலும் ஆட்சி,அதிகார மையங்களிலும் தமிழனை அமரவைத்து அழகு பார்ப்போம். நம் தமிழ் மொழியை போற்றி பாதுகாப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நமது கிராமங்களில் இருந்து பல திறமைகளை உருவாக்கி தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த அரசு பள்ளி மாணவர்களோடு துணை நிற்போம். தமிழக மாணவர்களோடு நிற்போம் , தமிழக உரிமைகளுக்காக போராடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதனையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட பதிவில், "நான் அரசுப் பள்ளியில் பயின்றவன், மதிய உணவு உண்டவன். நாடகம், பேச்சு, இலக்கியம், விளையாட்டு என பல்துறை சார்ந்த அறிவை திறனை எனக்குள் விதைத்தவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். என்றும் நன்றியோடு பெருமையாகச் சொல்வேன் நான் ஒரு அரசுப் பள்ளி மாணவன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் பதிவுகளை பார்த்த இணையவாசிகள் தங்களின் அரசு பள்ளி அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்