Skip to main content

"இது கத்தி மேல் நடப்பது மாதிரியான சவால்தான்" - இயக்குநர் வசந்தபாலன் பேட்டி 

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Vasantha Balan

 

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான ஜெயில் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தச் சூழலில், படத்தின் இயக்குநர் வசந்தபாலனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

 

ஜெயில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும்போது எப்படி இருக்கிறது?

 

ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல கான்செப்ட்டோடு என்டர்டெய்ன்ட்மென்ட் ஆக்ஷன் கலந்து ஒரு கதையை சொன்னது மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னுடைய ஒவ்வொரு படமும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இதற்கு முன்பு பேசிய கதைக்களத்தில் இல்லாமல் புதிய கதைக்களத்தில் பேச வேண்டும் என்று நினைத்தேன். படம் பார்ப்பவர்களுக்கும் முன்பு பேசிய பொருளில் இருந்து மாறுபட வேண்டும் என்று நினைத்து இந்தக் கதைக்களத்தை தேர்ந்தெடுத்தேன். மாற்று சினிமாக்களில் பெரிய சவால் உள்ளது. நாம் சொல்ல வந்த கதையின் கலைத்தன்மையும் கெடக்கூடாது. மக்களுக்கு சுவாரசியம் தரக்கூடிய விஷயமும் குறைந்துவிடக்கூடாது. அவை இரண்டையும் சரியான அளவில் கலந்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் அதிகமாகப்போனால் ஆவணப்படமாக மாறிவிடும். மற்றொருபுறம் அதிகமாகப் போனால் வழக்கமான கமர்ஷியல் படமாகிவிடும். இது கத்தி மேல் நடப்பது மாதிரியான சவால்தான். நான் விருப்பட்டுத்தான் அதை பண்ணிக்கொண்டு இருக்கிறேன். 

 

ஜி.வி.பிரகாஷை நீங்கள்தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துனீர்கள். தற்போது அவரை நாயகனாக வைத்து படம் இயக்கியுள்ளீர்கள். இசையமைப்பாளராக அவரிடம் வேலை வாங்குவதற்கும் நடிகராக வேலை வாங்குவதற்கும் இடையே ஏதாவது வேறுபாடு இருந்ததா? 

 

ஜி.வி.பிரகாஷ் இசை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு இசை என்பது எளிதாக வந்துவிட்டது. தற்போது நடிப்பு என்று வரும்போது 25 படங்களுக்கு மேல் அவர் நடித்துவிட்டார். அதனால் நாம் சொல்லும் காட்சியை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். 

 

படத்தின் உண்மைத்தன்மைக்காக என்ன மாதிரியான ஆராய்ச்சிகள் செய்தீர்கள்?

 

அங்காடித்தெரு படம் எடுக்கும்போது ரங்கநாதன் தெரு பற்றி எந்த ஆராய்ச்சியும் இல்லை. நான்தான் முதன்முதலில் அது பற்றி ஆராய்ச்சிகள் செய்து அந்தப் படைத்ததை எடுத்தேன். அதேபோல மறுகுடியமர்வுக்கு உள்ளாகும் மக்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் உள்ளன என்பது பற்றி இந்தப் படத்திற்காக ஆராய்ச்சி செய்தேன். அது பற்றிய தகவல்களை யூடியூப், ஃபேஸ்புக், ஊடகம், பத்திரிகை என பல இடங்களில் தேடித்தேடி எடுத்தேன். டிஸ்சாஸ்டர் ரீசெட்டில்மென்ட் இன் இந்தியா என்று ஒரு புத்தகம் உள்ளது. அந்தப் புத்தகத்தில் மறுகுடியமர்வு இந்தியா முழுவதும் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியது என விரிவாக இருந்தது. அதுபோக அந்தப் பகுதிக்கே சென்று அந்த மக்களிடம் பேசினேன். 

 

ad

 

ஒடுக்கப்பட்ட மக்கள் வாழக்கூடிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை தேடி செல்லும்போது, அந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலேயே நிராகரிக்கப்படும் சூழல் இன்றைக்கு உள்ளது. அது பற்றி கூறுங்கள்?

 

அந்த ஏரியாவில் வசிக்கும் மக்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பது பொதுப்பார்வை. இந்தப் பொதுப்பார்வை கேள்வியோடே நாம் நிறுத்திவிடப்போகிறோமா அல்லது அதற்கு பின்னால் உள்ள அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கப்போகிறோமா? அந்த கேள்வியை நோக்கித்தான் நாம் போகவேண்டும் என்று நினைக்கிறேன். 

 

ஹிஸ்டாரிக்கல் படங்கள் என்றாலே பிரம்மாண்ட படங்களாக உருவாகின்றன. ஆனால், நீங்கள் எடுத்த ஹிஸ்டாரிக்கல் படங்கள் மிகவும் யதார்த்தமான படங்களாக இருந்தன. பிரம்மாண்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

 

ஹிஸ்டாரிக்கலாக ஒரு விஷயத்தை உருவாக்குவது என்பது மிகக் கடினமானது. அதை உருவாக்க பெரிய அளவில் பொருட்செலவு தேவை.  ஷங்கர் சார், ராஜமௌலி சார் மாதிரியான ஆட்களால்தான் அதை கையாள முடியும். இன்றைக்கு நகரம் வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. இப்படியான சூழலில் பழைய விஷயத்தை மறுவுருவாக்கம் செய்வது என்பது சவாலானது. சி.ஜியில் அதைச் செய்யமுடியும் என்றாலும் அதற்கும் நிறைய செலவாகும். ஆகவேதான், சின்ன படங்கள் எடுக்கும்போது அந்தப் பக்கம் செல்லாமல் இருப்பது நல்லது என்று முடிவெடுத்து ஒதுங்கிவிட்டேன். 

 

ஜெயில் திரைப்படம் நீங்கள் எதிர்பார்த்த விவாதத்தை உருவாக்கும் என்று நம்புகிறீர்களா?

 

படைப்பாளியாக பொதுச்சமூகத்தில் நம்மால் ஒரு கேள்வியை முன்வைக்க முடியும். அங்காடித்தெரு படத்தில் ஊழியர்கள் உட்காருவதற்கு சேர் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்று 2010இல் ஒரு விஷயத்தை பேசினேன். சமீபத்தில் அரசு அதை அமல்படுத்தியுள்ளது. ஒரு கலைஞனின் வேலை நாம் பார்த்த ஒரு விஷயத்தை முன்வைப்பது. அதை இந்த சமூகம் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது அவர்கள் கைகளில்தான் உள்ளது. எனவே விவாதத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி. 

 

ஒரு படத்தின் வெற்றியாக எதை கருதுகிறீர்கள்? 

 

காவியத்தலைவன் படத்திற்கு தமிழக அரசின் பத்து விருதுகள், நார்வேயின் பத்து விருதுகள் உட்பட பல விருதுகள் கிடைத்தன. இன்றைக்கும் காவியத்தலைவன் என்ன மாதிரியான படம் சார் என்று என் கைகளைப் பிடித்து பாராட்டுவார்கள். நம்முடைய வேலையை நாம் ஒழுங்காக செய்துள்ளோம். அதற்கான அங்கீகாரம் சற்று தாமதமாக கிடைக்கிறது என்று நினைத்து கடந்து செல்வேன். 

 

வடசென்னை மக்களிடம் பழகிய அனுபவம் எப்படி இருந்தது?

 

வடசென்னை பற்றி இருக்கும் பொதுப்பார்வை தவறானது. இன்றைக்கு அந்த மக்கள் படித்து டாக்டர், இன்ஜினியர், ஐ.டி. ஊழியர் என வளர்ந்து அடுத்தகட்டத்திற்கு சென்றுவிட்டனர். ரொம்ப பாசமான மக்கள். நாங்கள் ஷூட் பண்ணிவிட்டு ஒரு மணிக்கு நடந்துவந்து கொண்டிருப்போம். தம்பி வந்து சாப்பிட்டு போ என்பார்கள். அந்த பேரன்பை ஷூட்டிங் முழுவதும் நான் பார்த்தேன். கிராமங்களில் மட்டும்தான் இது மாதிரியான விஷயங்களை பார்க்கமுடியும். அவர்கள் அன்பிற்கு நன்றிக்கடனோடு இருக்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்