பல்வேறு படங்களில் நம்மைத் தொடர்ந்து சிரிக்க வைத்த, சமீபத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உடல் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நடிகர் போண்டா மணியுடன் ஒரு சந்திப்பு நடத்தினோம்.
அப்போது அவர் பேசியதாவது “தற்போது சிறுநீரகத்துக்காக நான் காத்திருக்கிறேன். கிடைத்த பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உடல் பாதித்திருந்த நேரத்தில் எனக்குப் பல்வேறு உதவிகளைச் செய்தவர் மயில்சாமி. அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு கூட என்னை சந்தித்தார். எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தார். சினிமாவில் மேல் நிலையிலும் கீழ் நிலையிலும் இருப்பவர்களுக்குப் பிரச்சனை இல்லை. நடுவில் இருப்பவர்கள் இறுதிவரை நடுவிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வருமானம் குறைவு தான்.
மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. ஒரே நேரத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்தேன். இதனால் சர்க்கரை நோய் இருந்ததை கவனிக்காமல் விட்டுவிட்டேன். கையில் காசில்லாத நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்ந்தேன். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடைய பரிந்துரையின் பேரில் நல்ல சிகிச்சை வழங்கப்பட்டது. மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னதைப் பின்பற்றாமல் மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்றேன். அதனால் நிலைமை மோசமாகி டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது..
என்னுடைய நிலைமை பற்றி மீடியாவில் வந்த செய்தி அனைவரிடமும் பரவியது. இதைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் அவர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களிடம் எனக்கு உயர்தர சிகிச்சையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இன்றுவரை எனக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் மிக உயரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. செய்தியைக் கேள்விப்பட்டவுடன் முதல் ஆளாக மயில்சாமி தான் பலரிடமும் வாங்கி 60,000 ரூபாயை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். விஜய் சேதுபதி சாரோடு நான் இதுவரை நடித்ததே இல்லை. ஆனால் தன்னுடைய மேனேஜர் மூலம் அவர் எனக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கினார்.
தனுஷ் சார், சமுத்திரக்கனி சார் என்று பலரும் எனக்கு உதவினர். பல ரசிகர்களும் எனக்காகப் பணம் அனுப்பினர். பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு உதவி கேட்டு நான் கடிதம் எழுதினேன். அதன் பிறகு ரஜினி சார், ஐசரி கணேஷ் சார் ஆகியோரும் என்னை அழைத்து எனக்கு உதவினர். வடிவேலு சார் இதுகுறித்து என்னிடம் பேசக்கூட இல்லை என்பது வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் வடிவேலு சாருடன் நடித்து தான் எனக்கு அதிகம் புகழ் கிடைத்தது. அந்த நன்றி எனக்கு எப்போதும் இருக்கிறது. என்னோடு அதிகம் பழகிய சூரியும் எந்த உதவியும் செய்யவில்லை. இவன் உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி சம்பாதிக்கிறான் என்று பலர் அவதூறு பரப்புகின்றனர்.
விஜயகாந்த் சார் இன்று நலமாக இருந்திருந்தால் நான் யாரிடமும் உதவி கேட்க வேண்டிய நிலையே இருந்திருக்காது. விவேக் சார் இருந்திருந்தால் எனக்கு நிறைய உதவிகள் செய்திருப்பார். சிங்கமுத்து சார் சில உதவிகள் செய்தார். சூரி, தம்பி ராமையா ஆகியோர் எங்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் வாங்கித் தரவும் உதவவில்லை. புதிய ஹீரோக்களின் படங்களில் தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன. வடிவேலு சார் எங்களை விட்டு விலகிய பிறகு, திரையுலகில் பலர் அவரோடு இருந்த எங்களை மறந்துவிட்டனர்.” என்றார்.