Skip to main content

"என் இனிய தமிழ் மக்களே" - அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

bharathiraja released a press notice

 

இயக்குநர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே வைரமுத்து பாரதிராஜாவை நேரில் சென்று பார்த்து பின்பு செய்தியாளர்களிடம் பாரதிராஜா உடல்நலம் குறித்து விளக்கமளித்தார்.

 

இந்நிலையில் பாரதிராஜா தனது உடல்நலம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை பாரதிராஜாவின் மகன் மனோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கையில், "என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

 

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்." என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்