விருமாண்டி உட்பட பல படங்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை அபிராமி. நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தவர் சமீபத்தில் 'ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி' வெப்சீரிஸ் நடித்திருக்கிறார். நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக அவரை சந்தித்தோம்.
அபிராமி பேசியதாவது: “நல்ல கேரக்டர்கள் தொடர்ந்து என்னைத் தேடி வருகின்றன. அவற்றில் எனக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சினிமாவில் தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலை இல்லாததால் எனக்குப் பிடித்த கேரக்டர்களில் மட்டும் நடிக்கிறேன். இதில் என்னுடைய கேரக்டரும் நிஜ வாழ்வில் என்னுடைய கேரக்டரும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருந்தன. எனக்கு நன்கு பரிச்சயமான விஷயங்களும் இதில் இருந்தன. சவாலான விஷயங்களும் இருந்தன. இதில் நான் என்ஜாய் செய்து நடித்தேன். இப்போது நான் இந்தியாவில் தான் இருக்கிறேன். தொடர்ந்து படங்களும் வெப் சீரிஸ்களும் செய்து கொண்டிருக்கிறேன்.
இப்போது சினிமா நிறைய மாறியிருக்கிறது. உண்மைக் கதைகள் நிறைய வருகின்றன. அனைத்து வயதினருக்கான கதைகளும் வருகின்றன. பெண்களுக்கான அங்கீகாரம் தற்போது அதிகம் கிடைக்கிறது. மொழிகளின் மீது இயல்பாகவே எனக்கு ஆர்வம் உண்டு. விருமாண்டி படத்தில் நடிப்பதற்கு முன் மதுரை வட்டார மொழிக்காக என்னை விஜயகாந்த் சார், வடிவேலு சார் ஆகியோரின் படங்களைப் பார்க்கச் சொன்னார் கமல் சார்.
விருமாண்டிக்கு பிறகு நான் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். நன்கு யோசித்து எடுத்த முடிவு என்பதால் அதற்காக நான் வருத்தப்படவில்லை. சினிமா இல்லாத உலகத்திலும் எனக்கு பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. ஒரு பிரேக் எடுத்துக்கொள்வது எப்போதுமே நல்லது என்று நினைக்கிறேன். கமல் சாருக்கு நான் எப்போதுமே ரசிகை. நெப்போலியன் சார் ரொம்ப நல்ல மனிதர். சரத்குமார் சார் தான் எந்தத் துறையில் பயணித்தாலும் அதன் மூலம் பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர். மிடில் கிளாஸ் மாதவன் படம் என்னால் மறக்க முடியாதது. அதில் வடிவேலு அண்ணா, விவேக் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைப்பார்கள்.”