Skip to main content

சிவாஜி மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்... பாண்டுவை திட்டிய எம்.ஜி.ஆர்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

pandu

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட பாண்டு, இன்று (06.05.2021) காலை மரணமடைந்தார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். வெறும் காமெடி நடிகராக மட்டுமே பாண்டுவை அறிந்த ரசிகர்களுக்கு அவரது பிற பக்கங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

அடிப்படையில் ஓவியரான பாண்டுவிற்கு உலகறிந்த ஓவியராக வேண்டும் என்பதே ஆசை. அதற்காக ஓவியம் சார்ந்த பணிகளில் எப்போதும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவந்தார். அதே காலகட்டத்தில் பாண்டுவின் சகோதரர் இடிச்சப்புலி செல்வராஜ் சினிமாவில் காமெடி நடிகராகவும் எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு உதவி இயக்குநராகவும் செயல்பட்டுவந்தார். ஒருமுறை எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் ஒப்பிட்டு பாண்டு வரைந்த ஓவியம், பாண்டுவிற்கு எம்.ஜி.ஆருடனான நெருக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அந்த நெருக்கம்தான் பின்னாட்களில் பாண்டு திரைத்துறையில் அறிமுகமாகச் சந்தர்ப்பம் அமைத்துக்கொடுத்தது.

 

அதுபற்றி ஒரு பேட்டியில் பாண்டு கூறுகையில், "நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எம்.ஜி.ஆர் - சிவாஜி என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும். அதை மையப்படுத்தி வித்தியாசமாக ஓர் ஓவியம் வரைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 'நூறு சிவாஜி ஒரு எம்.ஜி.ஆருக்குச் சமம்' என்பதை அடிப்படையாக வைத்து, நூறு சிவாஜி புகைப்படத்தை ஒட்டி எம்.ஜி.ஆர் உருவத்தைச் செய்தேன். அதை அருகில் வைத்துப் பார்த்தால் சிவாஜியின் நூறு புகைப்படம் தெரியும். சற்று தள்ளிவைத்துப் பார்த்தால் எம்.ஜி.ஆர் உருவம் தெரியும். அதை நான் எம்.ஜி.ஆரிடம் காட்ட ஆசைப்பட்டேன். ஆனால், எம்.ஜி.ஆரைச் சந்திப்பது அவ்வளவு எளிதல்ல என்று என் அண்ணன் கூறிவிட்டார். பின், அந்த உருவத்தின் புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிரபலமானது. நிறைய சிவாஜி ரசிகர்கள் என்னைத் திட்டி கடிதம் அனுப்பினார்கள். கடைசியில் அது எம்.ஜி.ஆரின் கவனத்திற்கும் சென்றது. படப்பிடிப்புத் தளத்தில் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அந்தப் பத்திரிகை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இந்த ஓவியத்தை வரைந்த பாண்டு யாரென விசாரியுங்கள் எனக் கூறியுள்ளார். அங்கே இருந்த என் அண்ணன், என் தம்பிதான் வரைந்தான் எனக் கூறியுள்ளார். அவனை நாளை தோட்டத்தில் வந்து என்னைச் சந்திக்கச் சொல் என எம்.ஜி.ஆர். கூறிவிட்டார்.

 

நாம் சந்திக்க நினைத்த எம்.ஜி.ஆர், தற்போது நம்மை வந்து சந்திக்கச் சொல்கிறாரே என எனக்கு ஒரே மகிழ்ச்சி. மறுநாள் நேரில் போய்ச் சந்தித்தேன். முதலில் ஓவியம் சிறப்பாக இருந்தது எனக் கூறி பாராட்டிய எம்.ஜி.ஆர், பின் இந்த ஓவியம் எனக்கு மனவருத்தத்தைத் தந்தது எனக் கூறினார். சிவாஜி கணேசன் எவ்வளவு பெரிய நடிகர் என்று உனக்குத் தெரியுமா... அவர் நடிப்பிற்கு முன் நான் ஈடாக முடியுமா... நூறு சிவாஜி ஒரு எம்.ஜி.ஆர் என எந்த ஐடியாவில் நீ இதைப் பண்ண... அவர் மனம் எவ்வளவு வருத்தப்பட்டிக்கும்... ஒருத்தர் மனதை வருத்தி நல்ல பெயர் வாங்குவது நல்லாயில்ல எனக் கடிந்துகொண்டார். அவரிடமிருந்து எப்படியாவது பாராட்டுப் பெற்றுவிட வேண்டுமென்று, அவருடன் நடித்த நூறு கதாநாயகிகளின் புகைப்படங்களை வைத்து இதே ஐடியாவில் எம்.ஜி.ஆர் உருவம் செய்து, ஒரு வாரங்கழித்து எம்.ஜி.ஆரிடம் காட்டினேன். எம்.ஜி.ஆருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. பாராட்டுனா இப்படித்தான் வாங்கணும் என்று கூறி ஒரு தங்கச்செயின் பரிசாக அளித்தார்" எனக் கூறினார்.   

 

அதன் பிறகு, எம்.ஜி.ஆரிடம் நெருக்கமான பாண்டு, அவருடைய பல படங்களுக்குப் பெயர் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். பாண்டுவின் ஓவியத்திறமையை எம்.ஜி.ஆர் எந்த அளவிற்கு ரசித்துள்ளார் என்பதற்கு உதாரணம், திமுகவில் இருந்து விலகி 1972இல் தனிக்கட்சி தொடங்கியபோது கட்சிக்கான கொடியையும் சின்னத்தையும் வடிவமைக்கும் மிக முக்கியமான பொறுப்பை பாண்டுவிடம் ஒப்படைத்ததில் இருந்து அறியலாம். இன்று அதிமுகவின் சின்னமாக உள்ள இரட்டை இலையும் அதிமுகவின் கொடியும் பாண்டு வடிவமைத்ததே.

 

மேலும், கேப்பிடல் லெட்டர்ஸ் என்ற பெயர் பலகைகள் எழுதும் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு தற்போதுவரை பெயர் பலகை வடிவமைத்துக் கொடுத்துவந்தார். மெட்டலில் லெட்டர் போர்டு வைப்பதை பாண்டுதான் சென்னையில் அறிமுகம் செய்ததாகவும், இன்று பெரும்பாலான பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலக வாசல்களில் உள்ள பலகைகள் பாண்டு வடிவமைத்ததுதான் என்றும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்