விமான பணிப்பெண் தற்கொலை :
மாஜி அமைச்சர் முன் ஜாமின் மனு தள்ளுபடி
முன்னாள் விமான பணிப்பெண் கீதிகாசர்மா தற்கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள, அரியானா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் கோபால்கந்தாவின், முன் ஜாமின் மனுவை, டில்லி நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், அவரது வீடு மற்றும் நிறுவனங்களில், டில்லி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அரியானா மாநில உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் கோபால்கந்தா. இவருக்கு சொந்தமாக, எம்.டி.எல். ஆர்., என்ற பெயரில் விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது.
சில காரணங்களால் அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால், விமான நிறுவனத்தில், பணிப்பெண்ணாக பணியாற்றிய டில்லியைச் சேர்ந்த கீதிகாசர்மாவை,23, தனக்குச் சொந்தமான வேறொரு நிறுவனத்தில் கோபால்கந்தா பணியமர்த்தினார்.
இந்நிலையில், டில்லியில் உள்ள தன் வீட்டில் கீதிகா சர்மா, கடந்த 5ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்யும் முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், அமைச்சரின் நெருக்கடி காரணமாக இந்த முடிவெடுத்தாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால், அமைச்சர் கோபால்கந்தா, தன் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
கோபால்கந்தாவை விசாரணைக்கு ஆஜராகும்படி, நேற்று முன்தினம் போலீசார் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். அதேநேரத்தில், தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி, அவர் டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், அவரது முன்ஜாமின் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையில், அரியானா மாநிலம் சிர்சாவில் உள்ள கோபால்கந்தாவின் வீடு மற்றும் நிறுவனங்களில், நேற்று டில்லி போலீசார் சோதனை நடத்தினர். அதேநேரத்தில், கோபால்கந்தாவின் ஆதரவாளர்கள் அங்கு பேரணி நடத்தினர். "கந்தா மீது பொய் வழக்கு போடாதே' என, பேரணியின் போது கோஷமிட்டனர்.தலைமறைவாவதற்கு முன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நான் இரு மாதங்களாக கீதிகாவை சந்திக்கவோ, பேசவோ இல்லை' என, கோபால்கந்தா கூறியிருந்தார்.
ஆனால், அவர் வேறொருவரது "சிம்' கார்டை பயன்படுத்தி, கீதிகாவுடன் பலமுறை மொபைல்போனில் பேசியிருப்பதை, போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த, "சிம் கார்டை' கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தற்கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான, அருணா சத்தாவை, இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நேற்று டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. சத்தாவின் பெயர் கீதிகாசர்மாவின் தற்கொலை குறிப்பில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.