என்ஜினீயரிங் கல்லூரி கட்டிட விபத்து: சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு: காண்டிராக்டரிடம் விசாரணை
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த குன்னம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாட்டுக்காக உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த கட்டுமான பணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று கட்டிட பணி நடந்து வந்தது. மதியம் 3.30 மணியளவில் புதிதாக கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.
சிறிது நேரத்தில் மொத்த கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது. இதனால் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள். அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மோண்டு, பாகிலு, சங்காஜி, சாகர், சத்ரிகர், தீசான் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்கள் ஒடிசா மாநிலம் மயூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். காயம் அடைந்த சத்ருகன், சாதர், ரங்கய்யா ஆகியோர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் சத்ருகன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். சாதர், ரங்கய்யா இருவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் மேலும் படுகாயம் அடைந்த பைஜான், நானோ, வினோத் ஆகியோர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பைஜான் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. பலியான பைஜான் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை கட்டும் காண்டிராக்டை நாகர்கோவிலைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் எடுத்திருந்தார். அவரை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிது.