பெங்களூருக்கு மணல் கடத்தல்: 20 லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது
ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு மணல் கடத்த முயன்ற, 20 லாரிகளை போலீஸார் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள், 20 பேரை கைது செய்ததால், மணல் கொள்ளையர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட நீர்நிலை ஆதாரங்களில் இருந்து எடுக்கப்படும் மணலை, மணல் கொள்ளையர்கள் ஓசூர் வழியாக லாரிகள் மூலம் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதாக புகார் எழுந்தது.
இதையடதுத மணல் கடத்தலை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அசோக்குமார், எல்லையோர போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று காலை முதல் தமிழக எல்லையான ஜூஜூவாடி, ஹட்கோ பகுதியில் சிப்காட் இன்ஸ்பெக்டர் முருகன், ஹட்கோ இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநில எல்லையான ஜூவாடியில், மணல் கடத்த முயன்ற 14 லாரிகளை, 70 யூனிட் மணலுடன், போலீஸார் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல், பத்தலப்பள்ளி அருகே ஹட்கோ இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீஸார் நடத்திய சோதனையில் கர்நாடகாவுக்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட, 15 யூனிட் மணலுடன், ஐந்து லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள் கைது செய்தனர்.
கெலமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு மணல் கடத்த முயன்ற ஒரு டிப்பர் லாரி இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீஸார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையை அறிந்த ஏராளமான மணல் லாரி டிரைவர்கள், பாதி வழியிலே திரும்பி சென்றனர். கைது செய்த டிரைவர்களிடம் மணல் கொள்ளையர்கள் விவரங்களையும், லாரி உரிமையாளர்கள் விவரங்களையும் போலீஸார் சேகரித்துள்ளனர்.