போராட்டத்தை ஒடுக்க வேண்டாம் : பிரதமருக்கு ராம்தேவ் கடிதம்
ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யோகா குரு ராம்தேவ், கடந்த ஆண்டு ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
போராட்டம் தொடங்கிய மறுநாள் அதிகாலையில் போலீசார் அதிரடியாக புகுந்து மைதானத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டினர். பெண் வேடத்தில் தப்ப முயன்ற ராம்தேவை கைது செய்து ஹரித்வாரில் கொண்டுபோய் விட்டனர். ஒரு மாதம் டெல்லி வர தடை விதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் தாமாக எடுத்து விசாரித்து, டெல்லி போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
போலீஸ் தடியடியில் காயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க ராம்தேவுக்கு உத்தரவிட்டது. தற்போது இதே பிரச்னையை முன்வைத்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மறுநாள் முதல் உண்ணாவிரதம் இருக்க ராம்தேவ் திட்டமிட்டுள்ளார். பல நிபந்தனைகளுடன் டெல்லி போலீஸ் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் குஜராத் சென்றுள்ள ராம்தேவ், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “கடந்த முறை உண்ணாவிரத போராட்டத்துக்கு இடையூறு செய்ததுபோல இந்த முறையும் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு முயற்சிக்குமா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராம்தேவ், “போராட்டத்தை ஒடுக்க முயற்சிகள் எடுக்கக்கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கும் கடிதம் எழுதியி ருக்கிறேன்.
அமைதியாக, ஜனநாயக முறையில் நடக்கவுள்ள மக்கள் போராட்டத்துக்கு இடையூறுகள் செய்ய வேண்டாம் என கடிதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார்.