கேரளச்சிறுமி கொலை வழக்கு தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு
கேரளச்சிறுமி, பெரம்பலூரில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கேரள போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது, விசாரணை அறிக்கை ஆவணங்கள், தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேரளா, இடுக்கி, பீர்மேடு அருகே பாம்பனார் பகுதியில் உள்ள லான்ட்ரம் எஸ்டேட்டைச் சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவி மேகலா, 15,(பெயர் மாற்றப்பட்டுள்ளது). வீட்டு வேலைக்கென தமிழகத்தில் பெரம்பலூருக்கு அழைத்து செல்லப்பட்டு,கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக இரு மாநில போலீசாரும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், பெரம்பலூர் தி.மு.க.,முன்னாள் எம்.எல்.ஏ.,ராஜ்குமார், அவரது உதவியாளர் அன்பரசன் மற்றும் மகேந்திரன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழக போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இந்த வழக்கு, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், பீர்மேடு போலீசாரிடம் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஏஜென்ட் டுகளான பன்னீர்செல்வம்,விஜயகுமார்,ஹரிகிருஷ்ணன் ஆகியோ ரை கட்டப்பனை உதவி டி.எஸ்.பி., ஜிஜிமோன் தலைமை யிலான போலீசார் கைது செய்து,பீர்மேடு சப்-ஜெயிலில் ரிமாண்ட் செய்தனர்.
இது தொடர்பான விசாரணை அறிக்கை அடங்கிய "பைல்' களை கேரளா போலீசார், தமிழக கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழக போலீசார் ஏஜென்ட்டுகள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.