2 ஜி அலைக்கற்றையின் அடிப்படை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2ஜி அலைக்கற்றை தொடர்பாக விவாதித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 2ஜி அலைக் கற்றையின் அடிப்படை விலை ரூ.14 ஆயிரம் கோடி என இக்கூட்டத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது டிராய் பரிந்துரை செய்துள்ள விலையை விட ரூ. 4100 கோடி குறைவாகும். டெல்லி, மும்பை போன்ற வட்டங்களில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள் பயன்பாட்டு கட்டணங்களை செலுத்த வேண்டும்.
இந்த கட்டணத்தில் நாடு முழுவதும் உள்ள 5 மெகா ஹெர்ஸ் ஜிஎஸ்எம் ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை சேவையை பெற முடியும். டிராய் பரிந்துரைத்ததைவிட குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், செல்போன் கட்டணங்கள் உயரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனவரி 2008க்குப் பிறகு பெறப்பட்ட 122 நிறுவனங்களின் லைசென்சுகளை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததுடன், பிப்ரவரி 2012ல் அலைக்கற்றையை ஏலம் விடவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆகஸ்ட் மாதத்திற்குள் ஏலத்தை முடிக்க சுப்ரீம் கோர்ட் கெடு விதித்ததையடுத்து, ஏலத்தை நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.