கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்கவேண்டும்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் அறிக்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 13 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம், கல்லூரிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பொறுத்து ரூ.2.3 இலட்சம் வரை ரூ.2.8 இலட்சம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7 இலட்சமும் கட்டணமாக வ‹லிக்கப்படவேண்டும் என்று நீதியரசர் பாலசுப்பரமணியம் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு ஆணையிட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் அரசுக்குழு நிர்ணயித்ததைவிட அதிகமாக ரூ.6 இலட்சம் கட்டணம் செலுத்தும்படி கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாக மாணவர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.
பல மாணவர்கள் கடன்வாங்கி கட்டணம் செலுத்தியுள்ளனர். ஆனால், கடன்வாங்க வழியில்லாத மாணவர்கள் கட்டணம் செலுத்த இயலாததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கின்றனர். குறிப்பிட்டக்காலத்திற்குள் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு இடம் இல்லை என சில கல்லூரி நிருவாகங்கள் கூறிவிட்டதால், அந்த மாணவர்கள் கிடைத்த இடத்தை விட்டுவிட்டு வேறுபடிப்பில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
தனியார் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளை காரணமாக ஒரு மாணவன் கிடைத்த மருத்துவ கல்லூரி இடத்தில் சேரமுடியாத நிலை நிலவுவது பெரும் அவலம் ஆகும். மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான மோகினி கிரி வழக்கில்,"" கல்வி பெறும் உரிமை அடிப்படை உரிமையாகும். கல்விக்கட்டணம் செலுத்தாததற்காக எந்த மாணவருக்கும் மருத்துவ கல்லூரியில் இடம் மறுக்கப்படக்கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளை கட்டுப்படுத்தவேண்டியது அவற்றுக்கு அங்கீகாரம் அளித்த அரசின் கடமையாகும்'' என்று கடந்த 1992ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 20 ஆண்டுகளுக்கு பிறகும் மருத்துவக்கல்லூரிகளில் கல்விக்கட்டணக் கொள்ளை தொடர்வது தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகள் கடமை தவறிவிட்டதையே காட்டுகிறது. இனியும் இந்த அவலம் தொடரக்கூடாது. தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் நடைபெறும் கல்விக்கட்டணக்கொள்ளை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தவேண்டும். தவறு செய்த மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.