குடிக்கக் கூடாது என காதல் மனைவி கண்டிப்பு: கணவன் தற்கொலை
குடித்து விட்டு வீட்டுக்கு வரக்கூடாது' என்று கூறியதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி, கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த கணவன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவேற்காடு அன்னை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியேந்திரன் (வயது 29). இவருடைய மனைவி புவனா (26). இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சத்தியேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர், தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த புவனா, இனிமேல் குடித்து விட்டு வீட்டிற்கு வரக்கூடாது'' என்று கூறினார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து புவனா, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
மனைவி கோபித்து சென்று விட்டதால் மிகுந்த சோகத்தில் இருந்த சத்தியேந்திரன், நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்றார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சத்தியேந்திரன் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் அவர், தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார், சத்தியேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.