ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி சென்னையில் கைது
ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் சென்னையில் பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. மெஷின்களை வாடகைக்கு விட்டு, தொழில் செய்கிறார். சென்னை மணப்பாக்கத்தில் வசிக்கிறார்.
இவர் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த 2010-ம் ஆண்டு எனக்கு சொந்தமான பொக்லைன் மெஷினை ஒரு டிரைய்லர் லாரியில் ஏற்றிச் சென்றேன். உரிய ஆவணங்கள் இல்லாமல் அதை ஏற்றிச் சென்றதாக வணிகவரி அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து விட்டனர். பின்னர் அதற்கு 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதித்தார்கள். நான் இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு போட்டேன்.
அபராத தொகை பாதியை செலுத்திவிட்டு, பொக்லைன் மெஷினை எடுத்துக் கொள்ளலாம் என்று கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி மெஷினை எடுத்துக் கொண்டேன். ஆனால் அந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்தது.
இந்த நிலையில், அபராத தொகையை ரூ.2 ஆயிரமாக குறைத்து உத்தரவு வழங்குவதாகவும், அதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்றும், வணிகவரி அதிகாரி ராஜசேகர் என்பவர் பேரம் பேசுகிறார். ஆனால் அவர் கடந்த ஜுன் மாதமே ஓய்வு பெற்று விட்டார். இருந்தாலும் தொடர்ந்து பணியில் இருப்பதாக அவர் காட்டிக்கொள்கிறார். ஆயிரம் விளக்கில் உள்ள வணிகவரி அலுவலகத்துக்கு சென்று பார்த்தால், அங்கு அவர் தொடர்ந்து தனது இருக்கையில் உட்கார்ந்து இருக்கிறார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜான்கிளமென்ட், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ஜீவானந்தம், விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். வணிகவரி அதிகாரி ராஜசேகரன், தான் ஓய்வு பெற்ற பிறகும் லஞ்ச வேட்டை நடத்தி வருவது தெரிய வந்தது.
நேற்று மாலை 4 மணி அளவில் மைலாப்பூர் ஆலிவர் ரோட்டில் வைத்து, முருகேசனிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, லஞ்சஓழிப்பு போலீசார் ராஜசேகரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
ராஜசேகர் சென்னையை அடுத்த அன்னனூரில் குடும்பத்தோடு வசிக்கிறார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்புவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.