புனே தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது: சுஷில்குமார் ஷிண்டே
புனே நகரில் புதன்கிழமை இரவு 4 இடங்களில் குறைந்த சக்தியுள்ள குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமுற்றனர்.
பாலகந்தர்வா திரையரங்கு, ஜங்கிலி மகாராஜா சாலையில் (ஜே.எம். சாலை) உள்ள தேனா வங்கிக் கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டி, கார்வாரே பாலம் ஆகிய 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன.
இதை தொடர்ந்து இந்தப் பகுதிகள் அனைத்தும் போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை, வெடிகுண்டு சோதனைப் பிரிவு, குண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் அடங்கிய குழு ஆகியன குண்டுவெடிப்பு நடந்த இடங்களுக்கு விரைந்தன. அந்தப் பகுதிகளில் இருந்த 6 குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன.
புனே தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். விசாரணையில் முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே குண்டுவெடிப்பிற்கான காரணம் குறித்து தெரிய வரும் எனவும் அவர் தெரியவித்துள்ளார். டில்லியில் தனியார் டிவி சேனலுக்கு ஷிண்டே அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.