தேர்வில் ஆள் மாறாட்டம் : மாஜி அமைச்சர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம். இவர், கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். இதில் ஆள் மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியதாக எழுந்த புகாரின்படி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கல்யாணசுந்தரம் மீதும், இவருக்கு உடந்தையாக இருந்த, திண்டிவனம் கல்வி அலுவலக அலுவலர் ரஜினிகாந்த் மீதும், சிங்கனூர் ஆதிதிராவிட நலப் பள்ளி ஆசிரியர் ஆதவன் மீதும், வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி, திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து, ஏப்ரல் 23ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி, கல்யாணசுந்தரம் ஜாமின் பெற்றார். கடந்த 23ம் தேதி, கல்யாணசுந்தரம் கோர்ட் விசாரணைக்கு ஆஜரானார்.
வழக்கினை விசாரித்த நீதிபதி சரிதா, ஆகஸ்ட் 1ம் தேதி ஆஜராகி, குற்றப் பத்திரிக்கை நகலை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று காலை கல்யாணசுந்தரம், ரஜினிகாந்த், ஆதவன் ஆகியோர் ஆஜராகினர். இவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில், வரும் 3ம் தேதி விசாரணைக்கு ஆஜராக, நீதிபதி சரிதா உத்தரவிட்டார்.