கே.என்.நேருவின் உறவினர்கள் மீது சொத்து அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
பெங்களூரு கனகரத்தினம் மனைவி நாகராணி மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘’ தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எங்களது "இன்கா இன்டர்நேஷனல்' ஓட்டலை, வங்கியில் கடன் வாங்கிக் கட்டினோம். கடன் தவணை தவறியதால், ஓட்டல் பொது ஏலத்திற்கு வந்தது.
கே.என்.நேருவின் (தி.மு.க., முன்னாள் அமைச்சர்) நெருங்கிய உறவினர்கள் ராஜபூபதி, பரணிதரன் ஆகியோர், "நாங்கள் ஓட்டலை வாங்கி, நடத்திக் கொள்கிறோம்; கடனை செலுத்தி விடுகிறோம்' என்றனர், நான் மறுத்தேன். பின், மூன்று ஆண்டுகளுக்கு லீசுக்கு நடத்த, ஐந்து கோடி ரூபாய் தருவதாக கூறினர். சொத்து ஏலத்திற்கு சென்றுவிடக் கூடாது எனக் கருதி சம்மதித்தோம். இதற்கான ஒப்பந்தம் பதிவு செய்ய, பத்திரப்பதிவு அலுவலகம் நோக்கி காரில் சென்றோம். காரில் இருந்தவாறே பத்திரப்பதிவு அதிகாரிகள், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஆவணங்களில் என்னிடம் கையெழுத்து வாங்கினர். என்னை படித்துப் பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை.
ஒரு ஓட்டலில் வைத்து, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனர். பின், 11,25,000 ரூபாய்க்கு காசோலை தந்தனர். மீதித் தொகையை கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தனர். நேருவின் சகோதரர் ராமஜெயம், "மாநிலத்தை விட்டு வெளியேறி விடு' என, போனில் மிரட்டினார். இதனால், நான் பெங்களூரு சென்றுவிட்டேன்.
நான் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம், 2011 டிச., 2ல் புகார் செய்தேன்; நடவடிக்கை இல்லை. எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.மனு, நீதிபதி ஏ.செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, கார்த்திகேயன் ஆஜராகினர். நீதிபதி, "மனுதாரர் புகாரில் குறிப்பிட்டுள்ளபடி குற்றம் நடந்திருந்தால், வழக்கு பதிந்து, சட்டப்படி இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்' என்றார்.