பூட்டிய வீட்டில் கொள்யைடித்தோம்: அழகிகளுடன் உல்லாசமாக இருந்தோம்: கொள்யைர்கள் வாக்குமூலம் நாகர்கோவில் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீடு, கடைகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது. கோட்டார், மறவன்குடியிருப்பு, கீழசரக்கல்விளை, அவ்வைசண்முகம் சாலை பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் குளச்சல் குறும்பனையை சேர்ந்த ஒயிட்வின்(வயது 42), கேரள மாநிலம் பாறசாலை வெட்டுவிளையை சேர்ந்த மணிகண்டன் என்ற செல்வராஜ்(40) ஆகியோர் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்த நிலையில் நேற்று இருவரும் வடசேரி பஸ் நிலையத்தில் நிற்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இளங்கடையில் முகமது ஜவகர் வீட்டில் 14 பவுன் நகை, ரூ.5ஆயிரம் ரொக்கம் திருடியது உள்பட பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:- நாங்கள் பகலில் தெரு, தெருவாக சென்று பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்ட மிடுவோம். வீட்டில் ஆட்கள் இல்லை என்று உறுதி செய்த பின்னர் இரவில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிப்போம். திருடிய நகைகளை தனியார் நிதிநிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றோம். அந்த பணத்தில் தினமும் மது அருந்தினோம். விபசார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தோம். கடந்த மாதம் மார்த்தாண்டத்தில் ஆட்டோவில் சென்றபோது போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக எங்களிடம் திருட்டு நகை இருந்த பையை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டோம். என்றாலும் அப்போது போலீசார் எங்களை பார்த்து விட்டனர். தற்போது சிக்கிக் கொண்டோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 14 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நாகர் கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.