பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது பற்றி உயர் அதிகாரக்குழு
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது பற்றி ஆராய்வதற்கு சபாநாயகர் மீராக்குமார், உயர் அதிகாரக்குழு ஒன்றை அமைக்கிறார்.
சமீபத்தில் மராட்டிய மாநிலத்தின் தலைமைச்செயலகமான மும்பை மந்திராலயாவில் பயங்கர தீ விபத்து நடந்தது. இந்த விபத்தைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் இப்படியொரு சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் பாராளுமன்ற சபாநாயகர் மீராக்குமார் ஆர்வம் கொண்டிருக்கிறார்.
இந்திய ஜனநாயகத்தின் கோவில் என்று வர்ணிக்கப்படுகிற டெல்லி பாராளுமன்றக்கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். 85 ஆண்டு கால பழமைவாய்ந்த இந்தக் கட்டிடம், பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. தற்போதைய பாராளுமன்றத்துக்கு தீயணைப்புத்துறையினரிடமிருந்து இன்னும் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தற்போதைய பாராளுமன்றத்துக்கு மாற்றாக கட்டப்படவேண்டிய புதிய கட்டிடம் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை பரிசீலித்து வருகிறது.
புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரி சபை அனுமதி தர வேண்டி உள்ளது.
முதலில் புதிய பாராளுமன்றக்கட்டிடம் கட்டும் திட்டம் பற்றி ஆராய்வதற்கு சபாநாயகர் மீராக்குமார் உயர் அதிகாரக்குழு ஒன்றை அமைக்கிறார்.
வருகிற 7-ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. துணை ஜனாதிபதிதான், டெல்லி மேல்-சபையின் தலைவராகவும் இருப்பதால், புதிய துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர், அவருடனும் ஆலோசனை நடத்தி உயர் அதிகாரக்குழுவை சபாநாயகர் மீராக்குமார் அமைப்பார்.
தற்போது பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் சேர்த்து சுமார் 800 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, இரட்டை உறுப்பினர் தொகுதி போன்றவையெல்லாம் வருகிறபோது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய பாராளுமன்றத்தை எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு கட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
எனவே கூடுதல் உறுப்பினர்கள் அமர்வதற்கு இடவசதி செய்தும், இருபத்தோராம் நூற்றாண்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டும் புதிய பாராளுமன்றம் வடிவமைத்துக் கட்டவேண்டி இருக்கிறது.
இதுபற்றியெல்லாம் உயர்அதிகாரக்குழு அனைத்து வகையிலும் விரிவான ஆலோசனைகள் செய்தபின்னரே பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டம் இறுதி செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.