ஆத்திரமூட்டும் வகையில் பேச வேண்டாம்: ஹசாரே குழுவினருக்கு போலீசார் வேண்டுகோள்
உண்ணாவிரத மேடையில் ஆத்திரமூட்டும் வகையில் பேச வேண்டாம் என்று, அன்னா ஹசாரே குழுவினருக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டு முன்பாக, அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக, உண்ணாவிரத மேடையில் பேசியவர் ஒருவர் குறிப்பிட்டார்.
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். அதே நேரத்தில் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை தூண்டும் வகையில் உண்ணாவிரத மேடையில் இருந்து பேச வேண்டாம் என்றும், அதுபோன்ற பேச்சுகள் சட்டம்-ஒழுங்கை பாதித்து விடும் என்றும், அன்னாஹசாரே குழுவினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேடையில் சினமூட்டும் விதத்தில் பேசக்கூடாது என்று, போலீஸ் அதிகாரிகள் தனக்கு நோட்டீசு அனுப்பி இருப்பதாக, குழு உறுப்பினர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் நேற்று தெரிவித்தார். ஆனால், அப்படி நோட்டீசு எதுவும் அனுப்பவில்லை என்று, டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் ராஜன்பகத் மறுப்பு தெரிவித்தார்.
கோபமூட்டும வகையில் பேச வேண்டாம் என்று, குழு உறுப்பினர் நீரஜபுக்கு வேண்டுகோள் கடிதம் மட்டுமே அனுப்பியதாக அவர் கூறினார். "பிரதமர் வீட்டு முன்பு திரண்ட ஏறத்தாழ 100 பேர், தண்ணீர் பாட்டில், நிலக்கரி துண்டுகள் மற்றும் ரூபாய் நோட்டுகள், நாணயங்களை உள்ளே வீசி எறிந்தனர். அவர்கள் மிகவும் ஆவேசமாக காணப்பட்டதால் மிகுந்த சிரமத்துடன்தான் அங்கிருந்து அப்புறப்படுத்த முடிந்தது'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.