தரமான சட்டக் கல்வியே இந்தியாவின் தற்போதைய தேவை: முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன்
இந்தியாவில் தரமான சட்டக் கல்வி கற்றுத் தரப்படுவதே இப்போதைய தேவையாக இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசினார்.
சென்னை ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, பெண் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசியதாவது:-
இந்தியாவில் ஒவ்வொரு மனிதனுக்கும் அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமைகள் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதுதான் நீதித்துறையின் மிகப் பெரிய சவாலாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கமும், அறிவு வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதால், கோர்ட்டில் அதிக வழக்குகள் தாக்கல் ஆகின்றன.
ஆனால் போதிய கோர்ட்டுகள் இல்லாமை, நீதிபதிகளின் காலிப்பணியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் போன்றவற்றால் வழக்குத் தேக்கம் மலைபோல் குவிகிறது. இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்வதோடு, அளிக்கப்படும் தீர்ப்பும் முழுமை இல்லாமல் போய்விடுகிறது.
இந்தியாவின் தற்போதைய தேவையே தரமான சட்டக் கல்விதான். கெட்ட விதைகள் கெட்டதையே விளைவிக்கும். நல்ல விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. சட்ட மாணவனுக்கு தரமான கல்வி அளிக்கப்படும் நிலையில். அவன் தரமான வக்கீலாகவோ அல்லது தரமான நீதிபதியாகவோ மாறுவான். நல்ல வக்கீலும், நல்ல நீதிபதியும் வழக்குகளை உடனுக்குடன் தீர்ப்பார்கள்.
வக்கீல்கள் அடிக்கடி நடத்தும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில், நியாயமான காரணங்கள் தென்படவில்லை. இது வழக்குதாரர்களுக்குதான் பெரிய இன்னலாக இருக்கும். இதை சுப்ரீம் கோர்ட்டும் பலமுறை கண்டித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு என்றாலும் ஐகோர்ட்டு என்றாலும், அங்கு அறிவு முதிர்ச்சியான நீதிபதி மட்டுமே தேவையாக இருக்கவில்லை. பொறுமை, ஒருமைப்பாடு, ஆற்றல் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நீதிபதிகள்தான் இன்றைய தேவையாக உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் ஆண் வக்கீல்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண் வக்கீல்கள் இருப்பதை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.