புலிகள் வசிக்கும் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ள தடை
புலிகள் வசிக்கும் வனப் பகுதிகளில், வர்த்தக ரீதியிலான சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள் வதற்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் ஸ்வதேந்தர் குமார், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘’புலிகள் வசிக்கும் பகுதிகளில், எந்தவிதமான சுற்றுலா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை, இந்தத் தடை அமலில் இருக்கும். புலிகள் வசிக்கும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், தமிழகம், பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. ஆனால், கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த, இந்த மாநிலங்கள் தவறி விட்டன.
இதனால், அந்த மாநில அரசுகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இன்னும் மூன்று வாரங்களுக்குள், இதுகுறித்து அறிவிப்பு வெளியிடவில்லை என்றால், சம்பந்தபட்ட மாநில அரசுகளின் முதன்மை செயலர் மற்றும் வனத் துறையிடமிருந்து, தலா 50 ஆயிரம் ரூபாய், வசூலிக்கப் படும்’’என்று கூறினர்.