நலத்திட்டங்களை செயல்படுத்தக்கோரி பொதுமக்களை திரட்டி தி.மு.க. போராடும்: சுரேஷ்ராஜன்
குமரி மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த தி.மு.க. ஆட்சியில் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று பல கோடி ரூபாய் மக்கள் நல திட்டங்களை தலைவர் கருணாநிதி அறிவித்தார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டு வருவது மாவட்ட மக்களை புறக்கணிப்பது போன்றதாகும்.
குறிப்பாக பேச்சிப்பாறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் இதுவரையிலும் திறப்பு விழா காணப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் 22 கோடி மதிப்பீட்டில் அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி புதிய வகுப்பறை கட்டிடங்கள் இதுவரை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட வில்லை.
தி.மு.க. ஆட்சியில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக புதிய கட்டிடம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட வில்லை. தி.மு.க. ஆட்சியில் பேசி முடிக்கப்பட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. அதே போன்று குமரி மாவட்ட மக்களின் சுயஉரிமையை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தனியார் வனபாதுகாப்பு சட்டம் தி.மு.க. ஆட்சியில் பேசி முடிக்கப்பட்டு இறுதிநிலையை எட்டிய பின்பும் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான எவ்வித சிகிச்சை பிரிவும் ஏற்பாடு செய்யவில்லை. இத்திட்டங்களை உடனே நிறைவேற்றவில்லை என்றால் குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.