மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில்: கோவை கோர்ட் தீர்ப்பு
இரட்டை சடை போடாமல் பள்ளிக்கு சென்ற மாணவியின் தலை முடியை துண்டித்த உடற் கல்வி ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மாணவி தீபா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் கடந்த 2008-ம் ஆண்டு கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தார். அப்போது தீபா பள்ளிக்கு இரட்டை சடை போடாமல் சென்றார்.
இதை பார்த்த உடற்கல்வி ஆசிரியை ஷோபனா அந்த மாணவியை அழைத்து தண்டனை கொடுக்கும் வகையில், அவரது தலைமுடியை துண்டித்து, முழங்கால் போடவைத்தார். பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி, தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியை ஷோபனா மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை ஜே.எம் 7-வது கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தது.
17.07.2012ல் இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஹேமந்த் குமார், ஆசிரியை ஷோபனாவுக்கு 1 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.