மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
மஞ்சள் விலையை குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற இரண்டவாது நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்ட தலித் பெண் வசந்திக்கு நியாயம் கிடைக்க இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். சட்ட விரோதமாக அவரை 2 நாட்கள் காவல் நிலையத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மஞ்சள் விலையை குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ,12,000/- என நிர்ணயம் செய்யவேண்டும். அத்துடன் மஞ்சளை அரசே கொள்முதல் செய்ய முன் வரவேண்டுமென மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.