கோபத்தில் நான் அந்த முடிவை எடுத்து இருக்கக்கூடாது: கங்குலி வருத்தம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2008 ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 2008 ம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் மோசமாக ஆடியதை தொடர்ந்து அவர் ஓய்வு முடிவுக்கு வந்தார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற கங்குலி முதல் தர போட்டி மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வருகிறார். தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடிய கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஓய்வு குறித்து நான் எடுத்த முடிவு சில நேரங்களில் எனக்கு வருத்தம் அளிக்கிறது. கோபத்தில் நான் அந்த முடிவை எடுத்து இருக்கக்கூடாது. கோபத்தில் அந்த முடிவை நான் எடுக்காமல் இருந்து இருந்தால் மேலும் 2 ஆண்டுகள் விளையாடி இருக்கலாம்.
இலங்கைக்கு எதிரான தொடரில் மோசமாக ஆடியதால் இரானி கோப்பை போட்டி தொடரில் எனது பெயர் இடம்பெறவில்லை. அவர்கள் என்ன செய்யட்டுமோ செய்யட்டும். நம் காலம் வரும் வரை காத்து இருப்போம் என்று நான் முடிவெடுத்து இருக்கலாம்.
புனே வாரியர்ஸ் அணியுடன் 3 ஆண்டுகள் ஒப்பந்தமாகி உள்ளேன். எனவே அடுத்த போட்டியிலும் நான் விளையாடுவேன். திறமையும், உடற்தகுதியும் இருந்தால் எந்த வயதிலும் கிரிக்கெட் விளையாடலாம். வயது ஒரு பிரச்சினை கிடையாது.
ஒலிம்பிக் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் நாட்டின் நலன் கருதி மகேஷ்பூபதி, லியாண்டர் பெயசுடன் இணைந்து விளையாடி இருக்க வேண்டும். இவ்வாறு கங்குலி கூறினார்.
கங்குலி 113 டெஸ்டில் விளையாடி 16 சதத்துடன் 7,212 ரன்களும், 311 ஒருநாள் போட்டியில் ஆடி 22 சதத்துடன் 11,363 ரன்களும் எடுத்துள்ளார்.