போஸ்டர் சர்ச்சை : ப.சிதம்பரம் நிகழ்ச்சியை புறக்கணிக்கவும் முடிவு
கொத்தமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, வட்டார நிர்வாகிகளைக் கண்டித்து கிளை நிர்வாகிகள் கண்டன போஸ்டர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று நடக்கும் நிகழ்சியிலும் கலந்து கொள்ள கூடாது என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னால் மாவட்ட நிர்வாகி வீட்டு திருமணத்திற்க்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை திருமணம் நடக்கும் திருமண மண்டபம் அருகில் கடைவீதியில் பரபரப்பு ஏற்படுத்தும் விதத்தில் காங்கிரஸ் கட்சியின் கிளை நிர்வாகம் சார்பில் ஒரு கண்டன போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் கொத்தமங்கலம் கிளை காங்கிரஸ் கமிட்டி சார்பில் எடுத்துள்ள முடிவை மதிக்காத மாவட்ட தலைவர், வட்டார தலைவர் ஆகியோரை வண்மையாக கண்டிக்கிறோம் என்று கிளை நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்ட்டர் சம்மந்தமாக முன்னால் ஒன்றிய கவுன்சிலர் சிவசாமி கூறும் போது, கொத்தமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை எதிர்த்து தேர்தல் பணி செய்த மாற்று கட்சியை சேர்ந்தவர் வீட்டு நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் வரக்கூடாது என்று மாவட்ட தலைவர், வட்டார தலைவர் ஆகியோருக்கு தகவல் சொல்லியும் மதிக்காமல் மத்திய அமைச்சர் கலந்து கொள்ள செய்துள்ளனர்.
இதனால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி அலுவலகத்திற்கும் கொத்தமங்கலம் திருமண நிகழ்சியில் கலந்து கொள்ள கூடாது என்று பேக்ஸ் மூலம் தகவல் கொடுத்துவிட்டோம். கிளை நிர்வாகிகள் கொடுத்திருக்கும் தகவலை மதித்து மத்திய அமைச்சர் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். கிளை நிர்வாகிகளை மதிக்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கொத்தமங்கலம் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் ப.சிதம்பரம் நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்று கூறினார். இதனால் கொத்தமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.